வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய கைது தொடர்பில் வவுனியா தொல்பொருள் திணைக்களத்திடம் விசாரணை
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் தொல்பொருள் திணைக்களத்திடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மனிதவுரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு இன்று (16.04) அழைக்கப்பட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வாக்கு மூலமும் பெறப்பட்டது.
இதன்போது, தொல்பொருள் சின்னத்திற்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டதாகவும் தாம் கடந்த மாதம் 9 ஆம் திகதி காலை அங்கு சென்று பார்த்த போது சேதம் ஏற்பட்டு இருந்ததாகவும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மனிதவுரிமைகள் ஆணைக்கழுவிடம் தெரிவித்திருந்தனர்.
விசாரணைகளின் முடிவில் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய செயலாளர் மு.தமிழ்செல்வன் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 8 ஆம் திகதி சிவாரத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை நெடுங்கேணி பொலிசார் கைது செய்து எம்மை சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து எமது உறவினர்கள் வவுனியா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய 8 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணைகள் தொல்பொருள் திணைக்களத்துடன் இடம்பெற்றது.
இதன்போது தொல்பொருள் திணைக்களத்தினர் நாங்கள் தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தியதாக ஆவணங்களை காண்பித்தனர். அதன்போது மலை உச்சியில் நெருப்பு மூட்டியமைக்கான புகைப்படம் ஒன்றை சமர்ப்பித்து இருந்தனர்.
அதனை நாம் உடனடியாக மறுதலித்தோம். காரணம் சிவராத்திரி தினத்தன்று காலையில் இருந்து மாலை 4.30 வரை தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கு நின்றிருந்தனர். நாங்கள் அப்போதும் சரி, அதற்கு பின்னரும் சரி மலை உச்சியில் கொழுத்தவில்லை. அவர்கள் மறுநாள் 9 ஆம் திகதி தான் அங்கு சென்று பார்வையிட்டதாக கூறியிருந்தனர். நாங்கள் 8 ஆம் திகதி பூஜைக்கு சென்ற போதே அவை கொழுத்தப்பட்டு இருந்தன. அங்கு முதல் நாள் இரவு கடமையில் இருந்த பொலிசாரே அதனை கொழுத்தினர் எனத் தெரிவித்தோம்.
இவர்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களை சொல்லியுள்ளார்கள். அடுத்த கட்ட விசாரணை எமக்கும், நெடுக்கேணி பொலிசாருக்கும், வனவளத் திணைக்களத்திற்கும் இடம்பெறும் என மனிதவுரிமை ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.