மட்டக்களப்பில் அன்னை பூபதியின் திருவுருபடத்திற்கு அஞ்சலி
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியை நேற்று மாலை வந்தடைந்துள்ளது.இந்நிலையில் உயிர்நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு அப்பகுதி மக்கள் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்தி வட கிழக்கு தாயகம் எங்கும் பயணித்த நிலையில் அப்பகுதி மக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இவ்வூர்தி பவனி இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று (19) மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக 1988 மார்ச் 19 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து 1988 ஏப்ரல் 19 ஆம் திகதி உயிர் துறந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.