ஈஸ்டர் தாக்குதலின் பின்புலத்தில் ராஜபக்ஷக்கள் – இரா.சாணக்கியன்
இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு புனித செபஸ்தியன் பேராலயத்தில் நேற்றய தினம் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான விசேட திருப்பலி பூஜையும் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.
ஆலயத்தின் பங்குத்தந்தை அனஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் அருட்தந்தை நவரெட்னம் நவாஜி அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களின் ஆதம்சாந்திக்கான விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டுவர விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆலய முன்றிலில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் போது உயிர்நீர்த்தவர்களின் உருவப்படம் தாங்கிய பதாகை வைக்கப்பட்டு அதற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் பொதுமக்கள், அருட்சகோதரிகள், ஆலய பங்குமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
கொடூரமான ஈஸ்டர் குண்டுவெடிப்புக் கொலை நடந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்தக் குண்டுத் தாக்குதல் இயல்பாக நடந்ததா, இதற்குப் பின்னால் ஒரு பின்புலம் இருந்ததா, அரசியல் இலாபம் அடைவதற்காக செய்யப்பட்டதா எனப் பல சந்தேகங்கள் அந்த நேரத்தில் எழுந்தது. ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்த சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து சந்தேகத்திற்கிடமில்லாமல் இதுவொரு அரசியல் பின்புலத்துடன் சம்பந்தப்பட்டது என்பது போல் தென்படுகின்றது. இந்தக் கொலைக்குப் பின்னாலிருந்த எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இது விசாரணைக்குரிய காலமல்ல தீர்ப்பு வழங்கவேண்டிய காலமாகும். வத்திக்கான் போப்பாண்டவர் உட்பட மதத்தலைவர்கள் பலராலும் எத்தனையோ அழுத்தங்கள் கொடுத்தும் இலங்கை அரசாங்கம் மக்கள் நம்பக்கூடிய வகையில் இதுவரை மக்களுக்கு எந்தவொரு நீதியும் வழங்கவில்லை என்பதே சந்தேகத்திற்குரிய விடயமாகும்.
ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்குப் பின்புலத்தில் இருந்தவர்கள் யாரென்பது கடந்த வருடம் சனல்-4 ல் வெளிவந்த ஆவணப்படம் மூலமாக பல சந்தேகங்கள் இன்றும் எழுப்பப்பட்டிருக்கின்றது.
இன்று நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவுடன் தான் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். கடந்த வருடம் ஒரு சர்வதேச ஊடகவியலாளர் ஏன் இதற்கு ஒரு விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை, சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் உண்மை கண்டறியப்படலாம் என்று கூறியபோது உள்நாட்டு விசாரணை போதும் எனக் கூறியிருந்தார்.
இதே ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது 2017ல் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலே 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் சர்வதேச விசாரணைக்கு நான் தயாரெனக் கூறியிருந்தார்.
இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று முந்நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.
ஈஸ்டர் குண்டுவெடிப்பானது கொழும்பு, நீர்கொழும்புடன் சேர்ந்து ஏன் மட்டக்களப்பில் மட்டும் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கிலே எட்டு மாவட்டங்கள் இருக்கின்றபோது ஏன் மட்டக்களப்பில் மட்டும் நடத்தப்பட்டது என்பது பற்றி எமது மக்கள் மிக அவதானமாக சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் அதிகமான வாழ்கின்ற, தமிழ் வாக்காளர்கள் அதிகம் இருக்கின்ற மட்டக்களப்பிலே ஏன் இந்தக் குண்டுவெடிப்பு நடந்தது என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்புக் காணொளியிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டிருக்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடைய ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா அவர்களின் வாக்கு மூலத்திலே சொல்லப்படுகின்ற விடயங்களைப் பார்த்தால் எம்முடைய மக்களுக்கு உண்மை புரியும்.
அதாவது ராஜபக்ச குடும்பத்தினர் இந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்ததினூடாக நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது, நாட்டில் பலமானதொரு தலைவர் இருந்தால்தான் இங்குள்ள சிங்கள மக்களுக்குப் பாதுகாப்பு என்பதுபோல ஒரு மாயை உருவாக்கினார்கள்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்த காலப்பகுதியிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் தூண்டப்பட்டிக்கும். அன்று தமிழரசுக் கட்சியினரான நாங்கள் மட்டக்களப்பிற்கு தலைமைத்துவம் வழங்கிய காரணத்தினால்தான் துரதிஷ்டவசமான சம்பவங்கள், கலவரங்கள் எதுவும் நடைபெறாமல் பொறுப்புள்ள தலைவர்களாக மக்களை வழிநடத்தியிருந்தோம்.
இவர்களைப்போல கொடூரமான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நபர்கள் அதாவது கிறிஸ்மஸ் ஆராதனையின்போது தேவாலயத்தினுள்ளே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டிலே சிறையிலிருந்த ஒருவர் அந்த நேரத்தில் இருந்திருந்தால் எவ்வாறான வன்முறைகள் நடந்திருக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு புத்தகத்தை எழுதுவதனூடாக தங்களுடைய இரத்தக் கறைகளை கழுவியூற்ற முடியாது. ஆலயங்களிலே இந்த நிகழ்வுகளை நாங்கள் ஒழுங்கமைத்து மக்களை நாங்கள் திரட்டியெடுத்து ஆராதனையையும் நீதிக்கான அஞ்சலி நிகழ்வையும் நடத்துகின்றோமென்றால் இலங்கை சட்டத்திலே இவர்களுக்கு தண்டனை இல்லாதுபோனாலும் இறைவனுடைய நீதியின் கிழ் இவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மட்டக்களப்பிலே கொல்லப்பட்டது பிஞ்சுக் குழந்தைகள். அவர்களுடைய இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கு தாயோ தந்தையோ அங்கு இல்லாத நிலை காணப்பட்டது. அவர்கள் வைத்தியசாலையில் இருந்தனர், சிலர் உயிரிழந்திருந்தனர்.
அன்றைய தாக்குதலில் ஒரு குழந்தை தனது தாயையும் தந்தையையும் இழந்ததுடன் தனது இரு கண்களையும் இழந்து இன்றும் உயிருடன் இருக்கின்றது.நீங்கள் உங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தப்புவதற்காக, சிறையிலிருந்து தப்புவதற்காக, ஆட்சிக்கு வரவேண்டும் என்பற்காக செய்த பாவச் செயலுக்கு மக்கள் மன்னிப்பு வழங்கினாலும் இறைவன் உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை. நீங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்தே தீரவேண்டும். உங்களுக்கான தண்டனைணை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் வழங்குவார்கள்.
முந்நூறு பேரின் இரத்தக்கறைகளின் மீதுதான் நீங்கள் கொங்கிறீட் பாதைகளில் பயணிக்கின்றீர்கள். பாதைகளுக்கு கொங்குறீட் இடுவதும் மக்களின் வரிப்பணத்தில்தான். வீதி அபிவிருத்தி செய்வதனூடாக மகாத்மா காந்தி ஆகிவிட முடியாது. வீதி அபிவிருத்தி செய்வதனூடாக நீங்கள் செய்த கொலைகளுக்கு பரிகாரம் செய்துவிட முடியாது.
குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் அணுவணுவாக செத்துக் கொண்டிருக்கின்றார்கள். என்னுடைய கணவரும் இரண்டு குழந்தைகளும் மரணித்தது ஒரு தடவைதான். ஆனால் நான் அவர்களைப் பற்றி சிந்தித்து தினமும் செத்துக் கொண்டிருக்கின்னே; என அண்மையில் ஒரு தாய் தெரிவித்திருக்கின்றார்.
அன்று சியோன் தேவாலயத்தில் வெடித்த குண்டானது எந்தத் தேவாலயத்திலும் வெடித்திருக்கலாம். அவர்கள் சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததற்கான காரணம் என்னவென்பது தெரியாது. எங்கு வேண்டுமானாலும் அது நடந்திருக்கலாம். மரணித்தவர்கள் உங்களுடைய உறவினர்களாகக் கூட இருந்திருக்கலாம். இவர்களுடைய இரத்த வெறியிலே அகப்பட்டது உங்களுடைய பிள்ளைகளாக இருந்திருக்கலாம். இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தக் கொலைக் கும்பலை இந்த மாவட்டத்திலிருந்து நாங்கள் அகற்ற வேண்டும், இந்தக் கொலைக் கும்பலை இந்த நாட்டைவிட்டே அகற்ற வேண்டும். நாட்டைவிட்டு அகற்றவேண்டுமானால் அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடைபெற்று ஐந்தாவது வருடம் முடிவடைந்த இந்நாளில் இந்த மக்களுக்கான நீதியை கோருவதற்காக எங்களுடன் கைகோர்த்து வாருங்கள், நாங்கள் தனியாக இதனை செய்ய முடியாது, ஒரு கட்சியாக இந்தப்பொறுப்பை தனியாக முன்னெடுக்க முடியாது, மக்கள் எங்களுடன் ஒன்றாக நின்றால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கலாம். மிகவிரைவில் ஒரு தேர்தல் நடைபெறவிருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது.எதிர்காலத்தில் நாங்கள் தலைவராக தெரிவுசெய்பவர் ஊடாக இந்த கொலைகார கும்பல்களுக்கு தண்டனைப்பெற்றுக்கொடுக்க எங்களுடன் இணைந்துவரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.