போதைப்பொருளுடன் பொறியியலாளர் கைது
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தென் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது 1 கிலோ 238 கிராம் ஹேஷ் போதைப்பொருள், 90 கிராம் குஷ் போதைப்பொருள், 100,000 ரூபா பணம், 2 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகள், ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கும் விசேட பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கும் கிடைத்த தகவலுக்கு அமைய நுகேகொட விஜேராம சந்தியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த போதைப்பொருள் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மென்பொருள் பொறியியல் பட்டதாரி எனவும், அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக வேறு பாடப்பிரிவில் படித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ராகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர் நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக இன்று மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு ஹேஷ் மற்றும் குஷ் போதைப் பொருட்களை கொண்டு வரும் வலையமைப்பின் மூளையாக செயற்பட்டவர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.