12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்த பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வாழுகின்ற மலையக தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு இணைந்து அரச ஆட்சியாளர்களுக்கு 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்டனி ஜேசுதாஸன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இக்கோரிக்கைகள் முன்வக்கப்பட்டுள்ளது.
- பெருந்தோட்ட மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமையை உறுதிப்படுத்தும் முகமாக 1993 – 2018 வரையான காலப்பகுதியில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தோட்டங்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கு உறுதிகளை வழங்குவதுடன் மலையக மக்களுக்காக அரசு தற்போது முன்னெடுத்து வரும் காணி மற்றும் வீடமைப்புத் திட்டத்தில் காலி மற்றும் மத்தறை மாவட்டங்களில் வாழும் மலையக மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அத்தோடு இதுவரை காணி கிடைக்கப்பெறாத மலையக மக்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- மலையக சமூகம் சம அந்தஸ்தை பெறுவதற்காக கல்வி மற்றும் ஆளுமையை விருத்தி செய்வதற்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தென் மாகாணத்தில் காணப்படும் பாடசாலைகளுக்கு சகல பாடங்களுக்குமான சிறந்த ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
- தென் மாகாணத்தின் மலையக பிரதேசங்களில் இருந்தே அதிகமான பெண் பிள்ளைகளே பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகுகின்றனர். இது சார்ந்த கல்வி அமைச்சு கல்வி திணைக்களம் ஆழமான பகுப்பாய்வு ஒன்று செய்து தென் மாகாண மலையக பிள்ளைகளின் கல்வியை உயர்ந்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
- தனியார் தோட்டங்களில் வாழுகின்ற மலைய மக்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படுகின்றனர். பாடசாலைக்கு செல்ல வேண்டிய வயது பிள்ளைகள் தொழிலாளர்களாக செயற்படுவதாக கேள்விப்படுகின்றோம். எனினும் இம் மக்கள் தாங்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை வெளியில் சொல்ல முடியாதவர்களாக பயந்து வாழ்கின்றனர். எனவே இது தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை நியமித்து.இவர்களுக்கான நியாயத்தை நிலைநாட்டுவதற்காகன செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
- சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியில் மக மோசமான பாதிப்புக்குள்ளே வாழ்ந்து வருகின்ற மலையக பெண்களுக்கான சுகாதார அடிப்படை வசதிகளை அபிவிருத்திச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
- தற்போது நடைமுறையில் உள்ள 1000 ரூபா சம்பளத்தை நிபந்தனைகள் இன்றி வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பதோடு இந்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக கண்கானிப்பதற்கு கண்காணிப்பு குழு ஒன்றை நியமித்தல். தற்போதைய பொருளாதார நிலைமைக்குள் தமது வாழ்வை கொண்டு நடாத்துவதற்கு 1000 சம்பளம் எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை எனவே வாழ்க்கை செலவுக்கு ஏற்ற வகையில் சம்பள உயர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- தோட்டத்தில் தொழில் புரிகின்ற மலையக பெண்களின் எதிர்கால சேமிப்புகளான ஈ.பீ.எப் மற்றும் ஈ.டீ.எப் எனபவற்றை இல்லாமல் செய்துள்ளதுடன் மலையக மக்களின் உழைப்பைச் சரண்டும் போட் லீவ் அல்லது தேயிலையை குத்தகைக்கு கொடுத்துள்ள முறையை உடனடியாக நீக்கி பழைய முறையில் பெண்களுக்கான நாளாந்த தொழிலை வழங்க வேண்டும்.
- தமது குடும்பத்தின் வறுமை மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்தை சீராக்கும் என்னத்துடன் வீட்டுபணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் மலைய பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக கண்கானித்தல் மற்றும் அவர்களை பாதுகாப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- தென் மாகாணத்தில் வாழ்கின்றனர 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மலையக பெண்களையும் வாக்களர் பட்டியலில் சேர்த்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெண்களுக்காக பிரதேச செயலகம் ஊடாக நடைமுறைப்படுத்தும் அபிவிருத்தி திட்டங்கள் மலையக பெண்களையும் சென்றடைவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல்.
- பெருந்தோட்ட பகுதிகளில் வாழுகின்ற சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் போஷாக்கு குறைபாட்டை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கக் கூடிய விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தல்.
- மலைய பிரதேசங்களில் தொழிலின்றி வாழ்கின்ற இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.