மர்மமான முறையில் கொல்லப்பட்ட சட்டத்தரணி
வீடொன்றில் தனியாக வசித்து வந்த திருமணமாகாத பெண் ஒருவரை படுக்கையறையில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்திள்ளனர்.
தெஹிவளை, களுபோவில வீதியில் வசித்து வந்த 64 வயதுடைய சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி, குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சட்டத்தரணியின் சகோதரர் கனடாவில் வசித்து வருவதாகவும் இருவரும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்துள்ள நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி குறித்த இருவரும் இறுதியாக தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த சகோதரரின் நண்பரான மிரிஹானவில் வசிக்கும் ஒருவர் நேற்று பிற்பகல் கொஹுவல பொலிசாரிடம் கனடாவில் வசிக்கும் நண்பரின் சகோதரி பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என கொஹுவல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, கொஹுவல பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, முன்பக்க தானியங்கி வாயிலுக்கு அடுத்துள்ள வாயில் பூட்டப்பட்டிருந்துள்ளது.
தானியங்கி வாயிலின் சிறிய வாயில் ஊடாக தோட்டத்திற்குள் பிரவேசித்த போது வீட்டின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததாகவும், வீட்டின் பின்பக்கம் சென்று பாரத்த போது சமையல் அறை கதவு பாதி திறந்திருந்ததாகவும் அதன் ஊடாக உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் பொருட்கள் இழுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், தொடர்ந்து சோதனையிட்ட போது, வீட்டின் வரவேற்பறையை ஒட்டிய அறையில் சட்டத்தரணியின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டுக்குள் புகுந்த சில மர்மநபர்கள் அல்லது சிலர் வீட்டில் இருந்த மின்சாரத்தை துண்டித்து கட்டிலில் வைத்து கொன்று உடலை துணியால் மூடி வீட்டின் அலமாரிகளுக்கு தீ வைத்து கொளுத்தியது போலீஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இக்கொலை எப்போது நடந்தது என்று சரியாக கூற முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பதில் நீதவான் ரத்ன கமகே, முதற்கட்ட நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை களுபோவில போதனா வைத்தியசாலையில் வைத்து சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.