காத்தான்குடியில் போதைப்பொருளுடன் மென்பான முகவர் கைது
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14,570 மில்லி கிராம் ஐஸ் போதை பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று அதிகாலை 5 மணியளவில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் கீழ்ப்பகுதியில் மறைத்து வைத்து மேற்படி ஐஸ் போதைப் பொருள் எடுத்துவரப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி, மையவாடி வீதி மற்றும் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரபல மென் பானம் ஒன்றின் காத்தான்குடி பிரதேச முகவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.