மட்டக்களப்பில் மண்டை ஓடு கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலையதின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆற்றில் நேற்று பகல் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் மண்டை ஓடு மற்றும் இரு எலும்புக் கூடுகள் சிக்கியதையடுத்து கரைக்கு கொண்டுவந்துள்ளார்.
இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸ் தடவியல் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணையில் 40 வயதுக்கு உட்பட்ட ஆண் ஒருவரின் மண்டை ஒடு என பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய தர்சினி சம்பவ இடத்துக்கு சென்று மண்டை ஓட்டை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து மீட்கப்பட்ட மண்டை ஓடு எலும்புகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மீட்கப்பட்ட மண்டை ஓடு கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி காணாமல் போயுள்ள மனநலம் குன்றிய 28 வயதுடைய இளைஞனான பழைய பனிச்சையடியைச் சேர்ந்த செல்வராசா நிதுஷன் என்பவரது மண்டை ஓடு என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ள போதும் அது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.