பணயக்கைதிகளாக இருந்த பிள்ளைகள் மீட்பு
ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹங்வெல்ல – ஜல்தர அரச ஊழியர் வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று தனது மனைவியைக் கொல்வதற்காக கைக்குண்டுடன் தனது வீட்டிற்கு வந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்நேரத்தில் குறித்த பெண் வீட்டை விட்டு ஓடியதையடுத்து குறித்த நபர் தனது இரு பிள்ளைகளையும் வீட்டின் அறையொன்றில் பணயக்கைதிகளாக வைத்திருந்துள்ளார்.10 வயது சிறுமியும், இரண்டு வயது ஆண் குழந்தையமே பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய உடனடியாக செயற்பட்ட ஹங்வெல்ல பொலிஸ் அதிகாரிகள் குழுவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவும் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பொலிஸ் அதிரடிப் படையினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.