தமிழ் பொதுவேட்பாளருக்கு தகுதியானவர் தவராஜாவே! புத்திஜீவிகளின் விருப்பம் இதுவே
தமிழ் தேசியக் கட்சிகளின் பொதுவேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கு மும்மொழிப் புலமையும், ஆளுமையும் தகுதியும் உடையவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா ஒருவர் மட்டுமே என வடக்குக் கிழக்கு புத்திஜீவிகள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு –
தமிழ் மக்களுக்காக அமைதியான முறையில் குரல்கொடுத்து, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான எத்தனையோ வடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளை அவர்களுக்காக நீதிமன்றில் குரல்கொடுத்து அவர்களின் விடுதலைக்கு உதவிய பெருந்தகை ஜனபதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜாவே.
இவர் இன்று நேற்று அரசியலுக்காக சேவையாற்றிய ஒருவர் அல்லர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் தலைவராகப் பலவருடங்கள் செயற்பட்டு அமைதியான முறையில் தன் அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகின்றார். எந்தக் காலத்திலும் நாடாளுமன்ற ஆசனமோ மாகாண சபை பிரதிநிதித்துவமோ ஏன் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவமோ கட்சியிடம் கேட்டவர் அல்லர் இவர்.
குட்டிமணி தங்கத்துரை வழக்கு முதல் தமிழ் இன ஒடுக்கு முறைக்கு எதிராகப் பல வழக்குகளை தனது வாதுக்களால் வென்று தமிழ் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த சட்டமேதை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜாவே தமிழ் பொதுவேட்பாளருக்குத் தகுதியான ஒருவர் என வடக்கு கிழக்கு புத்திஜீவிகள் கருதுகின்றனர். – என்றுள்ளது.