வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 உடல்கள் இதுவரை மீட்பு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரத்தில் இருந்து காணாமல் போனவர்களில் இதுவரை 07 ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் ஊடாக சம்மாந்துறை பிரதேசத்திற்கு விடுமுறைக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை காணாமல் போயினர்.பின்னர் அன்றே மாலை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 5 மாணவர்கள் உயிருடன் மீட்புப் குழு தேடுதல் போது காப்பாற்றப்பட்டனர்.

அடுத்து காலநிலை சீர்கேடு மற்றும் இருள் காரணமாக மீட்பு பணிகள் மறுநாள் புதன்கிழமை (27) ஆரம்பமாகி 04 மத்ரஸா மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் முகமட் ஜெசில் முகமட் சாதீர்(வயது-16), அப்னான் , பாறுக் முகமது நாஸிக்(வயது-15) , சஹ்ரான்(வயது-15)ஆகியோரர் உள்ளடங்குவர்.

அடுத்து வியாழக்கிழமை மூன்றாவது நாளான இன்று (28) 3 உடல்கள் மீட்கப்பட்டன. மாணவனான அலியார் முகமது யாசீன்(வயது-15), உழவு இயந்திர சாரதி உதுமாலெப்பை முகமது அகீத்(வயது-17) , பொது மகன் கல்முனை புகை பரிசொதனை நிலைய ஊழியர் அஸ்மீர்(வயது-தெரியவரவில்லை) இதில் மீட்கப்பட்டன. இதுவரை மொத்தமாக 07 சடலங்கள் மீட்புப் குழுவினரால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.குறித்த ஜனாசாக்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொள்வதுடன் பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஜனாஸாக்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது.இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள்
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை மாளிகை;காடு ஜனாசா நலன்புரி அமைப்பு காரைதீவு தொண்டர்கள் இன மத வேறுபாடு இன்றி தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.