மக்களுக்கு ஆபத்தாக உள்ள கிரிஷ் கட்டடம் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கொழும்பு – கோட்டை பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள 60 மாடிகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிஷ் கட்டடத்திலிருந்து அபாயகரமான கட்டுமானப் பொருட்களை 2 வாரங்களுக்குள் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (06) கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த கட்டடத்திலிருந்து எந்தவொரு பொருளும் கீழே விழாத வகையிலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் அவற்றை அகற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் குறித்த கட்டுமானப் பொருட்களை அகற்றும் போது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய ஏதேனும் சூழ்நிலை உருவாகுமாயின் அதனைத் தவிர்க்கும் வகையிலான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கிரிஷ் கட்டட நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நீதவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், குறித்த நிறுவனத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழாம், 55 நாட்களுக்குள் அவற்றை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அதேநேரம், இந்தப் பணிகளை இரவு நேரத்தில் வீதியைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு இடையூறுகள் குறைந்த வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு அறியப்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அந்த நிறுவனத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழாம் தெரிவித்துள்ளது.