தேசியப்பட்டியல் விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

தேசியப்பட்டியல் விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

திருகோணமலையில் மாவையை அருகில் வைத்துக்கொண்டு சம்பந்தன் தெரிவிப்பு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இருப்பினும் அந்த நியமனத்தில் எடுக்கப்பட்ட நடைமுறைகள் சம்பந்தமாக தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மேலும் பரிசீலனை செய்யும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் சம்பந்தனின் இல்லத்தில் அவரின் தலைமையில் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழரசுக் கட்சியால் நியமனம் செய்யப்பட்ட தேசியப் பட்டியல் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. வழங்கப்பட்ட நியமனத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தீர்மானிக்கப்பட்டது.

நியமனம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடைமுறைகள் சம்பந்தமாக இம்மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் வவுனியாவில் கூடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் மேலதிகமாகப் பரிசீலனை செய்யப்படும்” – என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசியல் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் குழு உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கி.துரைராஜசிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சி.வி.கே. சிவஞானம் மற்றும் கே.வி.தவராசா  உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் அம்பாறை மாட்டம், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளருமான தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.