தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட சில நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன!
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சிட்னி நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
இதற்கமைய, அவருக்கு வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்வதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமது பிணை நிபந்தனையை மாற்றுவதற்கு சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனுஷ்க தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
டிண்டர் அரட்டை செயலி ஊடாக அறிமுகமான பெண் ஒருவருடன் சிட்னியின் கிழக்குப் புறநகர் பகுதியில் விருப்பமில்லாத உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை தனுஷ்க எதிர்கொண்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கில் கடந்த 2022 நவம்பரில் நீதிமன்றம் தனுஷ்கவுக்கு பிணை வழங்கியபோதிலும், டிண்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்தது.
அத்துடன், இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்புகொள்வதற்கும் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்திருந்தது.
இந்த நிலையில், அவரது பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக் கோரி தனுஷ்க தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான் ஜெனிபர் அட்கின்சன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கும், இரவில் வெளியில் செல்லவும் தனுஷ்கவுக்கு அனுமதியளித்தார்.
எனினும், இரவில் நடமாட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டமைக்கு, மனுதாரர் தரப்பு சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்தார்.
இரவில் மீண்டும் அவர் குற்றத்தில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று வாதிட்டார்.
எனினும், அவர் நீதிமன்றின் நிபந்தனையை மீறாமல் இருந்ததை கருத்திற்கொண்டு அவற்றைத் தளர்த்துவதாக நீதிவான் அட்கின்ஸ்ன் தெரிவித்துள்ளார்.
தனுஷ்க பிணையை மீறினால், விசாரணை அல்லது பல மாதங்கள் சிறைத் தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை