நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு மே 31 வரை நீடிப்பு!
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் அடுத்தகட்டம் நோக்கிப் பயணிப்பதை இலக்காகக்கொண்டு நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான ஆணை எதிர்வரும் மேமாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வுபெற்ற மாவட்டசெயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ்.நகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரடங்கிய ஆணைக்குழுவொன்று கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, மனோகணேசன், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த, இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் தவிசாளர் தாரா விஜேதிலக, கொழும்புப்பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் வசந்தா செனெவிரத்ன, முன்னாள் பாதுகாப்புச்செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான ஒஸ்டின் பெர்னாண்டோ, இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்கால்க், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாகப் பெருமளவானோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளனர். அதுமாத்திரமன்றி ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு போரால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்தும் சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்துடன் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த ஆணை முடிவுக்குவந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை டிசெம்பர் மாதம் சமர்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த ஆணைக்குழுவுக்கான ஆணை இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, தற்போது எதிர்வரும் மேமாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் மேமாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை