யுத்த காலத்தைப்போன்று ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி! பிரஜைகள் குழு ஆட்சேபனை

யுத்த காலத்தைப்போன்று செய்தித் தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் தெரிவித்துள்ளார்.

ஒளிபரப்பு அதிகார சபை கட்டளைச்சட்டம் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒளிபரப்பு மீதான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் ஏற்படுத்தி காலம் காலமாக ஒவ்வொரு அரசுகளும் ஊடகங்களுக்கு எதிராகப் பல சட்டங்களை ஏற்படுத்தி வருகின்றன.

கருத்துக்களை மக்களிடம் சென்டறடைவதை தடுக்கும் யுக்தியாக காலம் காலமாக ஊடகங்கள் தொடர்பில் ஒளிபரப்புகள் தொடர்பான சட்டங்களையும் கொண்டுவந்துள்ளன.

அந்த வகையில் யுத்த காலத்திலும் கூட செய்தி தணிக்கைகளை, ஊடக தணிக்கைகளை அரசாங்கம் கொண்டுவந்திருக்கின்றது.

அதன் ஊடாக இறுதி யுத்தத்திலும் சரி, யுத்த காலத்தில் ஏற்பட்ட மனித பேரவலங்கள் வெளியிலே ஊடகங்களிற்கு சொல்ல முடியாத பேரவலம் காணப்பட்டது.

குறிப்பாக இலங்கையில் ஊடகங்கள்கூட அந்த செய்தி தணி்கையால் பாதுகாப்பு அமைச்சால் கட்டுப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட செய்திகளை மாத்திரம் வெளியீடு செய்தது. ஆகவே, யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித பேரவலங்கள் தொடர்பாகவோ அல்லது காவுகொள்ளப்பட்ட தமிழர்களது எண்ணிக்கைகள் தொடர்பாகவோ இன்றுவரை விடைகாண முடியாத சூழல் காணப்படுகின்றது.

அந்த நிலைமை யுத்தகாலம் என்பதற்கு அப்பால், இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் அவசர அவசரமாக ஒளிபரப்பு அதிகார சபை சட்டத்தை மீளக் கொண்டு வருவதற்கு எத்தனிப்பதாக நாங்கள் ஊடகங்கள் ஊடாக அறிகின்றோம்.

குறிப்பாக ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் பண்புகளில் ஊடகங்கள் மிக முக்கியமானவை. நாட்டில் சிறந்த ஆட்சியை வலியுறுத்துவதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது.

ஊடகங்கள் என்பவை எப்பொழுதும் ஆட்சியாளர்களுக்கு சிம்மசொற்பனமாக இருக்கக்கூடிய கருவிகளாகக்கூட இருக்கின்றன.

இலங்கையில் இப்பொழுதுள்ள நிலையில் அதிகார வெறிபிடித்த அரசாங்கமாக அதிகாரத்தின் ஊடாக எதையும் சாதிக்கின்ற அரசாங்கமாக காணப்படுகின்றது.

இந்த சட்டத்தை தனக்கு சாதகமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு நிறைவேற்றுவதற்கான எத்தனிப்புகளை செய்கின்றது.

எனவே இந்த சட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை பிரஜைகளாக எண்ணி தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக் வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.