14வது ஆண்டு நினைவேந்தலுக்குள் சர்வதேசம் தனது கடப்பாட்டை செயலளவிலே காட்ட வேண்டும்… (முன்னாள் பா.உ – பா.அரியநேத்திரன்)

சுமன்)

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா உட்பட சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கும் புதிய பிரதமருக்கும் கொடுக்க வேண்டும். 14வது ஆண்டு நினைவேந்தலின் போது சர்வதேசம் தனது கடப்பாட்டை செயலளவிலே காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எற்பாட்டில் இடம்பெறும் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பேரணியின் இரண்டாம் நாள் மட்டக்களப்பில் ஆரம்பித்த வேளையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் நடத்திய இனப்படுகொலைக்கான நீதியைப் பெற வேண்டிய தேவை எங்களுக்கு இருந்து கொண்டிருக்கின்றது. இறைவனின் அருள் என்பதை நாங்கள் இன்று கண்ணாலே கண்டுகொண்டிருக்கின்றோம். முள்ளிவாய்கால் மண்ணிலே எமது உறவுகள் எவ்வாறு வதைக்கப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் என்பதை பதின்மூன்ற வருடங்களின் பின்னர் இலங்கையின் தலைநகரிலே கண்டிருக்கன்றோம். முள்ளிவாய்க்காலிலே எமது மக்கள் பட்ட அவலங்களில் சிறு வீதமானவை இன்று அனைவருக்கும் தரப்பட்டிருக்கின்றது.

அதன்மூலமாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் முதற்படியாக மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து இறக்கப்பட்டிருக்கின்றார்.

எமது மக்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய நிலைமையை குறிப்பாக சர்வதேசம் ஏற்படுத்தித் தர வேண்டும். கடந்த 73 வருடங்களாக தமிழர்களின் போராட்டத்தை அவதானித்து வருகின்ற அண்டை நாடு, தொப்புள் கொடி உறவாகப் பார்க்கப்படும் இந்தியாவிற்கு ஒரு கடப்பாடு இருக்கின்றது. இந்தக் காலகட்டத்திலே வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கும் தற்போது புதிய பிரதமாரக வந்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கொடுக்க வேண்டும். இதன் மூலமே எமது மக்களின் மனங்கள் திருப்திப்படும்.

இதேவேளை தொடர்ச்சியாகப் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான நீதி வழங்கப்பட வேண்டும். சிறையில் இருக்கும் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இன்று நாங்கள் 13வது நினைவேந்தலைச் செய்து கொண்டிருக்கின்றோம். 14வது ஆண்டு நினைவேந்தலின் போது சர்வதேசம் தனது கடப்பாட்டை செயலளவிலே காட்ட வேண்டும்.

எந்தத் தடைகள் வந்தாலும் எமது நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தே தீரும். பல தடைகள் வந்த காலத்திலும் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டதில் தொடர்ச்சியாக இந்த நினைவேந்தலைச் செய்து வந்திருகின்றோம். தற்போது புதிய பிரதமர் நினைவேந்தலுக்குத் தடையில்லை என்று கூறியிருக்கிறார். அவர் என்ன சொன்னாலும் நாங்கள் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தியே தீருவோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.