பசித்த வயிறுகள்… புசிக்க உணவில்லாத பூமி! உலகம் எதிர்கொள்ளும் அடுத்த அபாயம்

நம் கற்பனைக்கு எட்டாத பயங்கரத்தை நோக்கி நகர்கிறது உலகம். அது பட்டினி எனும் பயங்கரம். அதன் அறிகுறிகள் சில நாடுகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. விரைவில் அது பூதாகரமாக வெடிக்கவிருக்கிறது. வழக்கம்போல மனிதத் தவறுகளால் ஏற்படும் அழிவுகளில் ஒன்றுதான் இது. இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் அரங்கேறத் தயாராகிறது. என்ன பிரச்சினை, யார் காரணம்? பார்க்கலாம்.

அனலும் பசியும்
உலகம் முழுவதும் 4.9 கோடி பேர் பட்டினி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள். கடும் பட்டினியால் தவித்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது. இன்றும் தினமும் 81 கோடி பேர் இரவு உணவு கிட்டாமல் பசியுடன் படுக்கச் செல்கிறார்கள் என்கிறது ஐநா உலக உணவுத் திட்டம். ஊட்டச்சத்துக் குறைபாட்டால், லட்சக்கணக்கான குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்கிறார் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குத்தேரஸ். கூடவே கரோனா பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், உக்ரைன் போர் என அடுத்தடுத்த நிகழ்வுகள் பல வயிறுகளைப் பசியில் வாடச் செய்திருக்கின்றன. மிக முக்கியமாக மோசமான ஆட்சி நிர்வாகங்கள் இந்த அவலத்தைப் பரவலாக்கியிருக்கின்றன. நிலவரம் இன்னும் மோசமாகும் என்பதுதான் மேலும் கவலைக்குரிய விஷயம்!

பருவநிலை மாற்றத்தின் விளைவாகப் பட்டினி உருவாகலாம் என்று தொடர்ந்து நிபுணர்கள் சுட்டிக்காட்டிவருகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டின்போதும் இது எதிரொலித்தது. புவிவெப்பமயமாதல் தொடர்ந்து நிகழ்ந்துவருவதால், கடுமையான வெப்ப அலைகள் குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதாக டபிள்யூ டபிள்யூ ஏ எனும் அறிவியல் கூட்டமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். தெற்காசியாவில் இதன் பாதிப்பு கடுமையாக உணரப்பட்டிருக்கிறது. அமெரிக்காவும், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கடும் வெப்பத்தை எதிர்கொண்டிருக்கின்றன.

கோதுமை ஏற்றுமதியில் பாதிப்பு
உக்ரைன் போரால் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதும் அல்லாமல், இந்தப் பிரச்சினையில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத நாடுகளைச் சேர்ந்த மக்கள் பட்டினியின் விளிம்புக்குத் தள்ளப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது. கோதுமை ஏற்றுமதியில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் பங்களிப்பு மட்டும் 30 சதவீதம். கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் என அந்நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த உணவுப் பொருட்கள் தற்போது முடங்கியிருக்கின்றன. 80 சதவீத உணவுதானியங்களுக்கு உக்ரைனையும் ரஷ்யாவையும்தான் நம்பியிருந்தது எகிப்து. போர் காரணமாக உணவுப் பொருள் விநியோகம் தடைபட்டதால், பல்வேறு நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், சில நாட்களிலேயே கோதுமை ஏற்றுமதியைத் தடைசெய்ய வேண்டிய நிலை இந்தியாவுக்கு உருவானது.

மார்ச் மாதம் முதல், வெப்ப அலை வட இந்தியாவை வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கோதுமை உற்பத்தி குறைந்ததாலும் உள்நாட்டில் விலை அதிகரிக்கும் சூழல் உருவானதாலும் ஏற்றுமதியைத் தடை செய்தது இந்தியா. இதனால், எகிப்து மட்டுமல்ல உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் இந்தியாவிலிருந்து சென்ற கோதுமையால் நிலைமையைச் சமாளித்துவந்த பல நாடுகளும் பரிதவித்துக்கொண்டிருக்கின்றன.

உரங்களுக்குத் தட்டுப்பாடு

உக்ரைன் போரால் உரங்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐநா, நேட்டோ எனப் பல தரப்பிலிருந்தும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸ், அதன் நீண்டகால நட்பு நாடு. இந்தப் போரிலும் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் பெலாரஸ் மீதும் பொருளாதாரத் தடைகள் பாய்ந்திருக்கின்றன. அந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து உலகின் நைட்ரஜன் உரம் தயாரிப்பில் உலகில் 17 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத் தடை காரணமாக அந்நாடுகளின் உர உற்பத்தியும் ஏற்றுமதியும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. அது அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் தொடங்கி விவசாயத்தில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படரும் பட்டினி
ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, உணவு, எரிபொருள் தட்டுப்பாடு என இலங்கை பற்றியெரிவதை போல பாகிஸ்தான், ஆர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ், துனிசியா போன்ற நாடுகளில் இதே போன்ற நெருக்கடியும் உள்நாட்டுக் கலகமும் ஏற்படும் என்று சர்வதேச அளவில் இதுபோன்ற ஆபத்துகளைப் பற்றி ஆராயும் ‘வெரிஸ்க் மேப்பிள்க்ராஃப்ட்’ எனும் அமைப்பு கணித்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடையின் தாக்கத்தால், அங்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே அங்கு போராட்டங்கள் வெடித்துவிட்டன.

நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளே இப்படி வதைபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வறுமையிலும், வறட்சியிலும் உழலும் ஆப்பிரிக்க நாடுகளின் நிலை இன்னும் மோசம் எனத் தனியே சொல்ல வேண்டியதில்லை. எத்தியோப்பியா, சோமாலியா, நைஜீரியா, தெற்கு சூடான், மாலி என ஆப்பிரிக்க நாடுகள் பலவும் நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வறட்சிக்கும் பஞ்சத்துக்கும் பெயர்போன சோமாலியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதுமட்டுமல்ல, பருவநிலை மாற்றத்தின் விளைவாக கடும் மழைப்பொழிவையும் வெள்ளத்தையும் அந்நாடு சந்தித்திருக்கிறது.
இந்நாடுகளில் அரசுகளின் செயல்பாடுகளில் இருக்கும் குளறுபடிகளும், நிதி நெருக்கடிகளும் நிலைமையை மேலும் மோசமாக்கிக்கொண்டிருக்கின்றன.

என்ன தீர்வு?
பெருந்தொற்று காரணமாக உலகமே ஒரு தசாப்தம் பின்னுக்குச் சென்றுவிட்டது என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். உலகமெங்கும் பொதுமுடக்கம் காரணமாக வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு என கோடிக்கணக்கானோர் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு எனக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், சீனா, நைஜீரியா என உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாடுகள் புவிவெப்பமயமாதலின் விளைவுகளைச் சந்திக்கின்றன. உக்ரைன் போரின் காரணமாக, உலகச் சந்தையில் ஏற்பட்ட சரிவு பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்துவிட்டது. எரிபொருள் முதல் உணவுப்பொருள் வரை பல பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது.
இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள சில தசாப்தங்களுக்கு முன்பு இருந்ததைவிட மேம்பட்ட வசதிகளை உலகமயமாக்கல் உலகுக்குத் தந்திருப்பதையும் மறுக்க முடியாது. ஆனால், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியம். அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு இதுகுறித்த அக்கறை இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். முக்கிய வல்லரசு நாடான சீனா உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் கண்டிக்கத் தவறியது மட்டுமல்லாமல், உணவு நெருக்கடியையும் கவனிக்க மறுக்கிறது.

இவ்விஷயத்தில் அமெரிக்கா அக்கறையுடன் செயல்படுவது ஆறுதலான விஷயம். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் 2.3 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்திருக்கும் அமெரிக்க அரசு, உலகளாவிய உணவு நெருக்கடியைச் சமாளிக்கவும் 215 மில்லியன் டொலரை வழங்கியிருக்கிறது. ஏழை நாடுகளுக்கு உதவ உலக வங்கி 30 பில்லியன் டொலரை வழங்கியிருக்கிறது.

உலகின் சக மனிதர்களுக்கு நேர்ந்திருக்கும் இந்த அவலம் நம் ஒவ்வொருவரையும் நோக்கி நகர ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றைக்கு நாம் அனைவரும் இணைந்து செயலாற்றினால்தான் நம் சந்ததிகளைக் காக்க முடியும்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.