2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் – ஐசிசி அறிவிப்பு
டெஸ்ட் போட்டிகள் இரு நாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வந்தது. இந்த முறையை மாற்றி ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரை போன்று நடத்த ஐசிசி விரும்பியது. இதற்கான வேலைகள் அனைத்தையும் செய்து அதிகாரப்பூர்வமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் வெளியூர் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்.
இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சம்பியனுக்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இதில் முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் விளையாடின. இந்த ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி முதல் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இந்நிலையில் இரண்டாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டியில் விளையாட அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.
தற்போதைய நிலையில் அவுஸ்திரேலியா முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 2ஆவது இடத்திலும், இலங்கை 3ஆவது இடத்திலும், இந்தியா 4ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 5 ஆவது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் 2023 மற்றும் 2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களுக்கான இறுதிப்போட்டி நடைபெறும் மைதானங்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி 2023 க்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிபோட்டி ஜூன் மாதம் ஓவல் மைதானத்திலும், 2025க்கான இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை