பாபர் அஸாம் – ரிஸ்வான் அதிரடி : இங்கிலாந்தை 10 விக்கெட்டுகளால் வென்றது பாகிஸ்தான்
இங்கிலாந்துக்கு எதிராக கராச்சியில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டி பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்.
இப் போட்டி முடிவை அடுத்து 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் 1 – 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் குவித்த அபார சதமும் மொஹமத் ரிஸ்வான் பெற்ற அரைச் சதமும் பாகிஸ்தானின் 10 விக்கெட் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ஓட்டங்களைக் குவித்து அமோக வெற்றியீட்டியது.
பாபர் அஸாம் 66 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களை விளாசி 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இது அவர் குவித்த 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் சதம் ஆகும்.
மறுபக்கத்தில் ரிஸ்வான் 51 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் கடந்த 3 இன்னிங்ஸ்களில் குவித்த 3ஆவது தொடர்ச்சியான அரைச் சதம் என்பதுடன் 64 சர்வதேச இருபது 20 போட்டிகளில் அவர் பெற்ற 18ஆவது அரைச் சதமாகும்.
அஸாம், ரிஸ்வான் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 203 ஓட்டங்கள் பாகிஸ்தான் சார்பாக சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பதிவான அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் ஆகும்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் 5 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் இவர்கள் இருவரும் பகிர்ந்த 197 ஓட்டங்கள் 1 ஆவது விக்கெட்டுக்கான முந்தைய சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது,
வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.
அணித் தலைவர் மொயீன் அலி குவித்த அரைச் சதம், பில் சோல்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், பென் டக்கெட், ஹெரி ப்றூக் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது.
பில் சோல்ட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் 31 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஹேல்ஸ் 21 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த அடுத்த பந்தில் டேவிட் மார்லனும் வீரர்கள் அறைக்கு திரும்பினார்.
பில் சோல்ட்டும் பென் டக்கெட்டும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சோல்ட் 30 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (95 – 3 விக்.)
மொத்த எண்ணிக்கை 101 ஓட்டங்களாக இருந்தபோது பென் டக்கெட் 43 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும் ஹெரி ப்றூக், மொயீன் அலி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு தெம்பூட்டினார்.
ஹெரி ப்றூக் 19 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து மொயீன் அலியும் சாம் கரணும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 18 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
மொயீன் அலி 23 பந்துகளில் தலா 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களைக் குவித்தார்.
சாம் கரன் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷாநவாஸ் தஹானி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்துக்களேதுமில்லை