நாட்டையே உலுக்கிய இளம்பெண்ணின் மர்ம மரணம்! 50 பேர் பலி: போர்க்களமாகிய நாடு
ஹிஜாப்
ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானில் 80 நகரங்களில் இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் அடங்குவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்
போராட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக ஈரானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் கறுப்பு உடை அணிந்து தெஹ்ரான் வீதிகளில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இதன் காரணமாக பதற்ற நிலை அதிகரித்து வருவதாகவும் மேலும் பலர் உயிரிழக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
போராட்டத்தின் பின்னணி
இவ்வாறான நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணையின் போது கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மாஷா அமினிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வந்துள்ளது. எனினும் கடந்த 17ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், மாஷா அமினி மாரடைப்பு ஏற்பட்டதனாலேயே உயிரிழந்ததாக ஈரான் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
பல நாடுகளில் இருந்தும் ஆதரவு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 18ஆம் திகதி முதல் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் ஈரானில் தீவிரமடைந்துள்ள நிலையில் வேறு நாடுகளுக்கும் போராட்டம் பரவி வருகிறது.
ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக துருக்கியில் இஸ்லாமிய பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமன்றி, கனடாவிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனேடிய பிரதமர் கண்டனம்
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஈரான் மக்களுக்கு கனடா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரானில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு கனடா ஆதரவு அளிக்கிறது.
ஈரானிய ஆட்சியானது அதன் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
மேலும், பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை