இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜா காலமானார்..
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜா (41) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், உயிரிழந்துள்ளார்
இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர், இறக்குவானை சென். ஜோன்ஸ் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். சிட்னி சந்திரசேகர என்பவரினால் 2008 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட சிங்கள சின்னத்திரை நாடகமான ‘ஏ9’ மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார். அவர் தமது சினிமா பயணத்தை அதே ஆண்டில் ‘பிரபாகரன்’ என்ற சிங்கள மொழித் திரைப்படத்தில் ஆரம்பித்தார். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடித்திருந்தார்.
இலங்கை தமிழர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிங்கள திரைப்படங்களான ‘இனியவன்’, ‘சுனாமி’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இனியவன் படத்துக்காக விருதுகளையும் அவர் வென்றுள்ளார். அத்துடன், இலங்கையில் உருவான கோமாளி கிங்ஸ் என்ற பிரபல தமிழ் மொழி திரைப்படத்திலும் தர்ஷன் தர்மராஜ் நடித்துள்ளார். இறுதியாக அவர், ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ‘ரெல்ல வெரல்லட் ஆதரே’ என்ற தொலைக்காட்சி தொடரில், ஜெயராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை