“அதிர்ஷ்டம் அடிச்சா இப்டி அடிக்கணும் போல”.. ஆன்லைனில் ஐபோன் 13 ஆர்டர் செய்த வாலிபர்.. ஆனா, பார்சல்’ல வந்ததோ ஜாக்பாட்??!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு, மளிகை பொருட்கள், உடை, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

அடுத்த சில தினங்களில், இந்த பொருட்களும் வந்தடையும் என்பதால், மக்கள் பலருக்கும் இந்த ஆன்லைன் ஆர்டர் முறை, மிகவும் வசதியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே வேளையில் ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் போது சில குழப்பங்களும் நேராமல் இல்லை. சமீபத்தில் கூட ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் சிலர் பொருட்களை ஆர்டர் செய்த சமயத்தில், பார்சலில் வந்த விஷயம் அவரை கடும் குழப்பத்தில் தான் ஆழ்த்தி இருந்தது.
உதாரணத்திற்கு, டிரோன் கேமரா ஆர்டர் செய்த நபருக்கு உருளைக்கிழங்குகள் பார்சலில் வந்து சேர்ந்தது. அதே போல, இன்னொரு நபரும் விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு சோப் தான் பார்சலாக வந்திருந்தது. ஆன்லைன் ஆர்டர் மூலம் நிறைய வசதிகள் இருந்தாலும் இது போன்ற குழப்பங்களும் நேராமல் இல்லை.
அந்த வகையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு வந்து சேர்ந்த பொருள் தான், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் வலம் வரும் பதிவின் படி, மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர், ஆன்லைன் டெலிவரி நிறுவனம் ஒன்றில் ஐபோன் 13 மாடலை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வந்த பார்சலில், ஐபோன் 13-க்கு பதிலாக, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 இருந்துள்ளது.
பலருக்கும் சோப், பொம்மை, உருளைக்கிழங்கு என மாறி மாறி வரும் நிலையில், இங்கே ஜாக்பாட் அடிக்கும் அளவுக்கு சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. ஐபோன் 13 சுமார் 50,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ளதாகும். மறுபக்கம், “ஐபோன் 14” 80,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை மதிப்பு உள்ளதாகும்.
இதனால், அந்த இளைஞருக்கு ஆன்லைன் ஆர்டரில் அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக தான் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை