உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரித் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் மீது நேற்று (10) பரபரப்பான காலை நேரத்தில் ரஷ்யா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
ரஷ்யாவை இணைக்கும் கிரிமியா பாலத்தில் இடம்பெற்று குண்டு வெடிப்பை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுப்பதாகவே இந்தத் தாக்குதகள் இடம்பெற்றுள்ளன.
இதில் தலைநகர் கீவில் தாக்குதல்கள் தீவிரமாக இருந்தது. இதனால் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு ஓட்டம் பிடித்ததோடு கரும்புகை வானை முட்டியது.
உக்ரைனின் மேற்கிலுள்ள லெவிவ், டெர்னோபில் மற்றும் சிடோமிர், அதேபோன்று மத்திய நகரான ட்னிப்ரோவிலும் வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
கீவின் பரபரப்பான வீதி ஒன்றில் குண்டு வெடிப்பால் பாரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கார்கள் சிதறிக் காணப்படுவதோடு கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. அவசரப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தலைநகரில் இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் 24 பேர் காயமடைந்திருப்பதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா எம்மை இந்த பூமியில் இருந்து முற்றாக அழித்தொழிக்க முயற்சிக்கிறது” என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதில் கார்கிவ்வின் வலுசக்தி கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மின்சார மற்றும் நீர் துண்டிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது 75 ஏவுணைகள் வீசப்பட்டிருப்பதாக உக்ரைன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இவைகளில் 41 ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடிக்க முடிந்ததாக அது தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை