எதிர்கால வெப்ப அலைகள் வாழ தகுதியற்ற சூழலை உருவாக்கும்

அடுத்த சில தசாப்தங்களில் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வெப்ப அலை தீவிரம் அடையும் என்றும் அங்கு மனிதன் வாழத் தகுதியற்ற சூழல் ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் வெளியிட்ட புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால வெப்ப அலைக்கு தயாராதல் தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில், கடந்த 2010 தொடக்கம் 2019 வரை உலகெங்கும் 38 வெப்ப அலைத் தாக்கத்தினால் 70,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கக் கூடும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதே காலப்பகுதியில் கடுமையான காலநிலையுடன் தொடர்புபட்ட அனர்த்தங்களில் பதிவான 410,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் இந்த எண்ணிக்கை ஆறில் ஒன்றை விடவும் அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வெப்பமாதலை 1.5 பாகை செல்சியஸுக்கு மட்டுப்படுத்துவது பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த வரம்பை மீறுவதால் மோசமான காலநிலை மாற்றம் மனிதர்கள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கும் என்று எச்சரித்து வருகின்றனர்.

“2 பாகை செல்சியஸ் வெப்பநிலையின் கீழ், தீவிர வெப்ப நிகழ்வு சுமார் 14 மடங்கு அதிகரித்து வெப்பம் மற்றும் ஈரப்பத அளவு மிக அபாயகரமான நிலைக்கு உருவெடுக்கும்” என்று மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சராசரி நாட்களை விடவும் பங்களாதேஷில் வெப்ப அலை நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 வீதமாக அதிகரித்திருக்கும் நிலையில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இதனால் ஏற்படும் தாக்கம் பற்றி ஐ.நா எச்சரித்துள்ளது.

மூப்படையும் சமூகம், வெப்பநிலை அதிகரிப்பு, நவீனமாகும் உலகப் பகுதிகள் போன்ற அம்சங்களால் வளரும் நாடுகளில் வசிப்பவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.