பிரித்தானிய அரண்மனை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – உறுதியான அறிவிப்பை வெளியிடாத ஹரி-மேகன்!
பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிசூட்டு விழாவானது பாரம்பரிய முறைப்படி முன்னெடுக்கப்படும் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விழாவில் ராணியாராக கமிலாவும் முடிசூட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 மாதங்களுக்கு பிறகு இந்த விழா முன்னெடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா 2023இல் முன்னெடுக்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹரி-மேகன் தம்பதிக்கு சிறப்புவாய்ந்த நாள்
மூன்றாம் சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் சிலருக்கு தனிப்பட்ட விழாக்களை தள்ளிவைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சார்லஸ் மன்னரின் முடிசூட்டும் விழா எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்பட உள்ளது. லண்டனில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்படும் 6 கட்ட சடங்குகளில் இறுதியாக சார்லஸ் மன்னருக்கு கிரீடம் அணிவிக்கப்படும்.
மேலும் இந்த விழாவிலேயே ராணியாராக கமீலாவுக்கு சிறப்பு சடங்குகளுடன் கிரீடம் சூட்டப்படும். ஆனால், குறிப்பிட்ட திகதி தனிப்பட்ட முறையில் ஹரி- மேகன் தம்பதிக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஹரியின் அழைப்பைத் தவிர்க்கும் சார்லஸ்
மே 6ம் திகதி ஹரி- மேகன் தம்பதியின் மகன் ஆர்ச்சி தமது நான்காவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இவ்வாறான நிலையில், மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்கள் யார் யார் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதேவேளை இளவரசர் ஹரி அமெரிக்காவில் குடியேறிய பின்னர், ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியது ராஜகுடும்பத்து உறுப்பினர்களையும் மன்னர் சார்லஸையும் மிகவும் வருத்தியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, அரண்மனையை விட்டு வெளியேறிய பின்னர் தமது தொலைபேசி அழைப்புகளை மன்னர் சார்லஸ் தவிர்த்து வருவதாகவும் ஹரி கவலை தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மன்னராக சார்லஸ் முடிசூட்டுவதால், ஹரியின் மகன் ஆர்ச்சி இளவரசர் பட்டத்திற்கு உரியவர் ஆகிறார். ஆனால் தமது பிள்ளைகளுக்கு வேண்டும் என்றே உரிய பட்டத்தை அளிக்க அரண்மனை மறுப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார் ஹரி.
ராஜகுடும்பத்தில் பல நிகழ்வுகள்
இந்த நிலையில் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, ஹரி- மேகன் தம்பதி மன்னரின் முடிசூட்டும் விழாவில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளை, மே 6ம் திகதி தான் ராணியாரின் சகோதரி இளவரசி மார்கரெட்டின் திருமண நாள், விக்டோரியா ராணியாரின் மகன் ஏழாம் எட்வர்ட் மன்னர் இறந்த நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே குறித்த திகதியை அரசாங்கம், இங்கிலாந்து தேவாலயம் மற்றும் ராஜகுடும்பத்து முக்கிய உறுப்பினர்கள் என அனைவரிடம் கலந்தாலோசித்த பின்னரே முடிவு செய்துள்ளதாக அரண்மனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை