பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகளால் தோற்றது இலங்கை மகளிர் அணி
பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் (இருபது 20) கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்தது.
தொடர்ச்சியாக 6 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவி சமரி அத்தப்பத்து இந்தப் போட்டியில் பிரகாசித்த போதிலும் அது வீண் போனது.
இந்த வருடம் பாகிஸ்தானுடன் விளையாடிய நான்கு போட்டிகளிலும் இலங்கை தோல்வியைத் தழுவியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது.
சமரி அத்தபத்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 26 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் ஓஷாதி ரணசிங்க 26 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்களைவிட ஹாசினி பெரேரா (18), காவிஷா டில்ஹாரி (11) ஆகியோரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஒமய்மா சொஹெய்ல் 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்ககைக் கைப்பற்றினார்.
இது அவரது தனிப்பட்ட அதி சிறந்த பந்துவீச்சு பெறுதியாகவும் இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியாகவும் பதிவானது.
அவரைவிட டூபா ஹசன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
நிடா தார் (26), ஆலியா ரியாஸ் (20), ஆயிஷா நசீம் (16) ஆகிய மத்திய வரிசை வீரங்கனைகள் திறமையாக துடுப்பெடுத்தாடி பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இலங்கை பந்துவீச்சில் காவிஷா டில்ஹாரி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இதேவேளை மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக அரை இறுதிக்கு தெரிவாகியுள்ள தாய்லாந்து, வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாடும். தொடரும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கையும் பாகிஸ்தானும் விளையாடும்.
நடப்பு சம்பியன் பங்களாதேஷுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டதால் பங்களாதேஷ் வெளியேற்றப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை