கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனை படுகொலை செய்யத் திட்டம் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் திருகோணமலையைச் சேர்ந்த ஞானசேகரலிங்கம் ராஜ்மதன், மருதங்கேணியைச் சேர்ந்த லூயிஸ் மரியாம்பிள்ளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களான முருகையா தவேந்திரன் மற்றும் காராளசிங்கம் குலேந்திரன் ஆகியோர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
மீண்டும் கைது
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பிணை வழக்கை விசாரித்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் மீண்டும் கைதுசெய்யப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு மற்றும் அரச தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதிபதி மஞ்சுள திலகரத்ன, சந்தேக நபர்களை நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
பிணை உத்தரவு
இதன்பிரகாரம் சந்தேக நபர்கள் தலா 2.5 இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் தலா இரண்டு சாரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு சந்தேக நபர்களும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
ஐந்தாவது சந்தேக நபர் அவுஸ்திரேலியாவில் இருப்பதுடன், குறித்த சந்தேக நபர் இதுவரை வழக்கில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை முயற்சி, அதற்கான ஏற்பாடுகளை செய்தமை மற்றும் படுகொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
திருத்திய பயங்கரவாத சட்டத்தின் திருத்திய பிணை ஏற்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணத்தின் அடிப்படையில் குறித்த நான்கு சந்தேக நபர்களுக்கு நீதிபதி பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரட்ணவேல், சுரங்க பண்டார, ரணித்தா ஞானராஜா, சுவாதிகா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை