போர் வியூகத்தை மாற்றிய ரஷ்யா – ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய தலையிடி
உக்ரைன் மீதான தனது போரால் ஐரோப்பிய நாடுகள் பெரும் சக்திவள நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவிவழங்கும் நாடுகள் அதற்கு இனிமேல் மின்சாரத்தையும் வழங்கவேண்டிய இக்கட்டான நிலைமையை உருவாக்கும் வகையில் ரஷ்யாவின் போர் வியூகம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த சனியன்று இடம்பெற்ற கிரைமியாவின் கெர்சபாலம் மீதான தாக்குதலுக்குரிய பதிலடி என்ற அடிப்படையில் உக்ரைனிய மின்சார உற்பத்தி உட்கட்டமைப்பை இலக்கு வைத்து ரஷ்யா தொடர்ந்தும் தாக்கிவருகிறது.
உக்ரைனின் சக்தி வள கட்டமைப்பு அழிப்பு
உக்ரைன் மீதான போர் ஆரம்பிக்கபட்ட பின்னர் உக்ரைனிய மின்கட்டமைப்பை ரஷ்யா கடுமையாக குறிவைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் உக்ரைனின் சக்தி வள உட்கட்டமைப்பில் 30 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இப்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் உற்பத்தி நிலையமான சப்போறிஷியாவின் தேவை உக்ரைனுக்கு மிகமிக அவசியமாக மாறியுள்ள நிலையில், அந்த நிலையம் தொடர்ந்தும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
கிரைமியா பாலத் தாக்குதல்
இதற்கிடையே கிரைமியா பாலத் தாக்குதலில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படும் ஐந்து ரஷ்யர்கள் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்ததாக ரஷ்யப் புலனாய்வு பிரிவு இன்று அறிவித்துள்ளது.
உக்ரைனிய இராணுவ உளவுத்துறையால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குரிய வெடிமருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து நெகிழி சுருள் சரக்குகளுக்குள் மறைக்கப்பட்டு, ரஷ்யாவிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் ரஷ்ய புலனாய்வு பிரிவு கூறியுள்ளது. ஆனால் இந்தக்கருத்தை உக்ரைன் மறுத்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை