சர்வதேச தொழிலாளர் அமைப்பு இலங்கைக்கு கொடுத்துள்ள உறுதிமொழி..
இலங்கையிலுள்ள தொழிலாளர்களின் தரவுகளை இலத்திரனியல் இயங்குதளத்தில் நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு உதவுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொழிலாளர்களின் நல் வாழ்வுக்காகவும், அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவையும் வழங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் சிம்ரின் சி சிங் மற்றும் மூத்த வேலைவாய்ப்பு நிபுணர் ஷேர் வெரிக் ஆகியோர் நேற்று பிரதமரை சந்தித்துள்ளனர்.
குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கை
இதன்போது கொவிட் தொற்றின் தாக்கத்தினால் இலங்கை எதிர்கொண்ட பாதிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன விளக்கியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தொழிலாளர்களுக்கு உதவ அரசாங்கம் எடுத்துள்ள குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இலங்கையிலுள்ள தொழிலாளர்களின் வேலை தரத்தை உயர்த்துவதோடு அவர்களை வறுமையில் இருந்து விடுவிப்பது முக்கிய நோக்கமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சில சாதகமான மாற்றங்கள் காணப்படுகின்ற போதிலும் உலக மந்தநிலை, கடன் நிலைத்தன்மை உள்ளிட்ட பல காரணிகளினால் இலங்கை உட்பட பல வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் மேலும் சில நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் சிம்ரின் சி சிங் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சந்தையில் நெருக்கடி
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொழிலாளர் சந்தையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலாளர்களின் நல் வாழ்வுக்காகவும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமது முழு ஆதரவையும் வழங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
கருத்துக்களேதுமில்லை