‘மிகுந்த நம்பிக்கையோடு உலகக் கிண்ணத்தை எதிர்கொள்கிறோம்’ – தலைவர்கள் தினத்தில் தசுன் ஷானக்க

அணித் தலைவர்களின் ஒன்றுகூடலுடன் அவுஸ்திரேலியா 2022 (உலகக் கிண்ணம்) திருவிழா ஆரம்பமாவுள்ளது.

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் 16 அணிகளினதும் தலைவர்கள் மெல்பர்னில் சனிக்கிழமை (15) ஒன்றுகூடி தங்களது அணிகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அணித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடியது இதுவே முதல் தடவையாகும்.

உலகம் முழுவதும் உள்ள கோடான கோடி கிரிக்கெட் இரசிகர்களை ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பில் ஆழ்த்தக்கூடிய எட்டாவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் அணிகளின் தலைவர்கள் தினத்துடன் இன்று ஆரம்பமானது.

இலங்கைக்கும் நமிபியாவுக்கும் இடையில் ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (16) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஏ குழுவுக்கான முதல் சுற்று போட்டியுடன் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடங்குகிறது. அப் போட்டியைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இதே குழுவுக்கான போட்டி நடைபெறவுள்ளது.

45 போட்டிகளைக் கொண்ட 28 நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா இந்த இரண்டு போட்டிகளுடன் ஆரம்பமாவதுடன் உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் அரங்கில் நவம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந் நிலையில் 8 வருடங்களுக்கு முன்னர் உலக சம்பியனான இலங்கை, இம்முறை சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்து மீண்டும் சம்பியனாகவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பப் போட்டியிலிருந்து முழுத் திறமையுடன் விளையாடவுள்ளது. ஆசிய கிண்ண சம்பியன் பட்டம் அதற்கான உத்வேகத்தை இலங்கை அணிக்கு கொடுக்கும் என்பது உறுதி.

தசுன் ஷானக்க கருத்து

மெல்பர்னில் நடைபெற்ற தலைவர்கள் தினத்தில் கலந்துகொண்டு பேசிய இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க,

‘ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியைதத் தொடர்ந்து நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உலகக் கிணணப் போட்டிகளை எதிர்கொள்கிறோம். இங்கு சுற்றுசூழல் உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் எங்களது துடுப்பாட்டத்தில் நன்கு கவனம் செலுத்திவருகிறோம்.

‘அதைவிட எமது பந்துவீச்சாளர்கள் நிலைமைக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்தி வருகிறார்கள். சமீர (துஷ்மன்த), லஹிரு (குமார) ஆகிய இருவரும் எம்முடன் இணைந்துகொண்டுள்ளனர். ஆசிய கிண்ணத்தின் பின்னர் அவர்கள் அணியில் இணைந்துகொண்டுள்ளது எமக்கு மேலதிக தைரியத்தை தருகிறது’ என்றார்.

‘ஆம், வெற்றி அந்தந்த நாளைப் பொறுத்தது. இருபது 20 கிரிக்கெட் போட்டியில்  எந்த அணி, எப்போது சிறப்பாக விளையாடுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணி வெற்றி அடையும் என நான் நினைக்கிறேன்’ என தசுன் ஷானக்க மேலும் கூறினார்.

சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட தசுன் ஷானக்க, சுற்றுப் போட்டியில் திறமையாக விளையாடுவோம் எனக் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் ஒரே குழுவில் இடம்பெற்று முதல் சுற்றுக்கான தனது ஆரம்ப போட்டியில் இலங்கையுடன் விளையாடிய நமிபியா இந்த வருடமும் இலங்கையுடன் ஆரம்பப் போட்டியில் விளையாடவுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும்    நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் திறமையாக விளையாடிய நமிபியா சுப்பர் 12 சுற்றுக்கு இலங்கையுடன் முன்னேறயிருந்தது.

கடந்த வருடம் போன்று ஆச்சரியங்களை ஏற்படுத்துவது இலகுவல்ல என்பதை அறிந்துள்ள ஜேர்ஹார்ட் இரேஸ்முஸ் தலைமையிலான நமிபியா அணி இந்த வருடம் சவால்களை எதிர்கொள்ளவுள்ளது. இந்த வருடமும் வேகப்பந்துவீச்சாளர்களான டேவிட் வைஸ், ரூபென் ட்ரம்ப்பெல்மான் ஆகியோரில் நமிபியா பெரிதும் தங்கியிருக்கிறது.

இந்த வருடப் போட்டிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட நமிபியா அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்முஸ்,

‘கடந்த வருடத்தைவிட இந்த வருடம் சற்று சிரமமானது என நான் கருதுகிறேன். குறைந்த வாய்ப்புகள் உள்ள அணி என்ற குறிச் சொல்லுடன் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம். கடந்த வருடத்தை விட ஒரு படி முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

‘எங்களது தயார்படுத்தல்கள் சிறப்பாக இருந்தது. அவுஸ்திரேலியாவின் வங்கரட்டா நகருக்கு சில தினங்களுக்கு முன்னர் வருகைதந்து இங்குள்ள சூழலுக்கு எங்களைத் தயார்படுத்திக்கொண்டுள்ளோம். எனவே குறைந்த வாய்ப்புகள் உள்ள அணி என்ற குறிச் சொல்லுடன் முன்னேறிச் செல்வதற்காக விளையாடுவொம். எமது விரர்கள் போட்டிகளில் உயர் ஆற்றல்களுடன் விளையாடினால் உலகக் கிண்ணத்தில் சாதிக்க முடியும் என நான் நினைக்கிறேன்’ என தெரிவித்தார்.

தலைவர்கள் தினத்தில் ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் மொஹமத் நபி, அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச், பங்களாதேஷ் அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன், இங்கிலாந்து அணித் தலைவர் ஜொஸ் பட்லர், இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன், பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம், நெதர்லாந்து அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ், ஸ்கொட்லாந்து அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன், அயர்லாந்து அணித் தலைவர் அண்ட்றூ பெல்பேர்னி, ஐச்சிய அரபு இராச்சிய அணித் தலைவர் சி. பி. ரிஸ்வான், தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா, மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் நிக்கலஸ் பூரண், ஸிம்பாப்வே அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் ஆகியோரும் கலந்துகொண்டு தமது அணிகள் பற்றி கருத்துக்களை வெளியிட்டனர்.

 

இலங்கையின் போட்டிகள்

 

நமிபியாவுடன் ஞாயிற்றுக்கிழமை (16) விளையாடவுள்ள இலங்கை, ஏ குழுவுக்கான இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை செவ்வாய்க்கிழமையும் (18) கடைசிப் போட்டியில் நெதர்லாந்தை வியாழக்கிழமையும் (20) சந்திக்கவுள்ளது.

இந்த வருட உலகக் கிண்ண முதல் சுற்றில் (தகுதிகாண்) சகல போட்டிகளிலும் வெற்றிபெற்று நம்பிக்கையை அதிகரித்துக்கொண்டு சுப்பர் 12 சுற்றுக்குள் பிரவேசிக்க இலங்கை முயற்றிக்கும் என்பது நிச்சயம்.

இதனை முன்னிட்டு துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் அதிசிறந்த ஆற்றல்களை இலங்கை வீரர்கள் வெளிப்படுத்துவர் என நம்பப்படுகிறது.

நமியாவுடனான போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா ஆகிய அறுவரில் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறவுள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து சகலதுறை வீரர்களான தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, வேகபந்து வீச்சாளர்களான துஷ்மன்த சமீர, லஹிரு குமார, ப்ரமோத் மதுஷான், டில்ஷான் மதுஷன்க ஆகிய நால்வரில் இருவர், சுழல்பந்துவீச்சாளர் மஹேஷ் தீக்ஷன ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை குழாத்தில் இடம்பெறும் சுழல்பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே நாளைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்க முடியாது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.