மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவம்! ரயில் முன் தள்ளிவிடப்பட்ட வீடியோ ஆதாரம் சிக்கியது
மாணவி சத்யாவை ரெயில் முன் தள்ளி கொன்ற வழக்கு.
வீடியோ ஆதாரத்தை கைப்பற்றிய அதிகாரிகள்.
கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன்னர் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கின் வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது.
அதன்படி ஆதாரத்தை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் கைப்பற்றி உள்ளனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை கல்லூரி மாணவி சத்யாவை, சதீஷ் என்ற வாலிபர் மின்சார ரயில் முன்பு தள்ளிவிட்டு கொடூரமாக கொலை செய்தார்.
தமிழகத்தை உலுக்கிய சுவாதி – ராம்குமார் சம்பவம் போலவே நடந்த இச்சம்பவமும் மாநிலத்தை அதிர வைத்தது. குற்றவாளி சதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணைக்கு எடுத்துள்ளனர். வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரி கூறுகையில், சத்யா கொலை செய்யப்பட்டதற்கான நேரடி சாட்சிகளிடம் நடத்திய விசாரணை விவரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது.
அந்த சாட்சிகளிடம் நாங்களும் விசாரித்து வருகிறோம். இதில் முக்கியமான ஆதாரம் மாணவி ரெயில் முன்பு தள்ளி விடப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு ஆகும். கொலையாளி சதீஷ் மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளிவிட்ட கண்காணிப்பு கேமரா காட்சி எங்களுக்கு கிடைத்துள்ளது.
அடுத்தகட்டமாக மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளி விட்ட காட்சியை மின்சார ரயில் டிரைவர் கோபால் பார்த்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளி சதீஷை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்வோம் என கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை