வடக்கில் முதலீடு என்ற போர்வையில் நிலைகொள்ளும் சீன இராணுவம் – எழுந்துள்ள சர்ச்சை!
வடக்கில் முதலீடுகள் என்ற போர்வையில் சீன இராணுவம் பல்வேறு இடங்களில் தரித்து நிற்பதாக இந்திய பத்திரிகை ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தி தொடர்பில் அரசாங்கம் தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சீன இராணுவத்தின் பிரவேசமானது இந்தியாவுடன் பிரச்சினையை ஏற்படுத்தும் விடயமாகும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையின் பூகோள அரசியல் தொடர்பில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் பிழையான அணுகுமுறைகளை எடுத்து நாட்டை சிக்கலான நிலைக்கு தள்ளியுள்ளது.
சீன இராணுவத்தின் முதலீடு
சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உரம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டது. ரஷ்யாவின் விமான சேவை தடுத்து நிறுத்தப்பட்டமையினால் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையிலேயே அந்த பத்திரிகையில், வடக்கு பிரதேசங்களில் சீன இராணுவம் பல்வேறு இடங்களில் முதலீடுகள் என்ற போர்வையில் தரித்து நிற்கின்றது என்ற செய்தி ளெியிடப்பட்டுள்ளது.
இந்திய புலனாய்வுத்துறையினர் தமிழ்நாட்டுக்கு இதன்மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக பல்வேறு துறையினருக்கும் அறிவித்துள்ளனர். இதனால் இது பெரும் சர்ச்சையை தோற்றுவிக்கின்றது.
மீண்டும் மீண்டும் பூகோள அரசியலில் கையாளும் தவறான வழிமுறையை அரசாங்கம் நிறுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இது தொடர்பில் சிறிலங்கா அதிபர், அரசாங்கம் தகுந்த அறிவித்தலை விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை