கைகலப்பின் போது கூரிய ஆயுதத்தால் நகை வியாபாரி மீது தாக்குதல்;வாழைச்சேனையில் சம்பவம்!..
வாழைச்சேனை சந்தைப் பகுதியிலுள்ள ஜூவலரி ஒன்றில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கைகலப்பில் வியாபாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாங்கேணி வாகரையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மேற்படி ஜூவலரியில் இரு தங்க நகைகளை வெவ்வேறாக அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். அதில் ஒரு நகையை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக கிடைக்கும் பணத்தை செலுத்தி வந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினமான நேற்று மீதியாக செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்திய பின்னர் நகையைக் கையளிக்குமாறு கேட்ட போது வியாபாரி திரும்பிக் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி பின்னர் கைக்கோடரியால் ஜூவலரி வியாபாரி தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையின் போது பொலிசாரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் மேற்கொண்டவர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று சரணடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை