தென்கொரியாவை ஆத்திரமூட்டும் செயற்பாட்டில் தொடர்ந்தும் வடகொரியா..
வடகொரியா தமது கிழக்கு மற்றும் மேற்கு கரையோர பகுதிகளில் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. தென்கொரியா தமது வருடாந்த பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பித்த ஒரு நாளிலேயே தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் குறித்த பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 100 ஷெல் தாக்குதல்கள் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்றைய தினம் காலை வேளையிலும் 150 ஷெல்களை நேற்றைய தினமும் வெடிக்கச்செய்துள்ளதாக தென்கொரிய கூட்டுப்படைகளின் தலைவர்கள் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடு இரண்டாவது தடவையாக வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரிய கடற்பகுதியில் குறித்த ஷெல்கள் விழவில்லையெனவும், இருநாடுகளுக்கிடையிலான கடல்சார் வலயத்தில் அவை வீழ்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வடகொரியாவின் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், அது தொடர்பில் வன்மையான கண்டனங்களை வெளியிடுவதாகவும் தென்கொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடகொரியாவின் தொடர்ச்சியான இவ்வாறான செயற்பாடுகள் கொரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துமென தென்கொரியா தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை