நீண்டகால வைரியான நியூஸிலாந்துடன் தனது சொந்த மண்ணில் மோதுகிறது அவுஸ்திரேலியா

கிரிக்கெட் அரங்கில் தனது நீண்டகால வைரியான நியூஸிலாந்துடனான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று ஈட்டிய சம்பியன் பட்டத்துடன் கடந்த வருட உலகக் கிண்ண அத்தியாயத்தை முடித்துவைத்த அவுஸ்திரேலியா, 8ஆவது அத்தியாயத்தில் குழு 1க்கான சுப்பர் 12 சுற்றை தனது சொந்த மண்ணில் அதே அணியுடனான போட்டியுடன் இன்று ஆரம்பித்துவைக்கவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுகடன் குழு 1 இல் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து, இலங்கை ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

சிட்னி விளையாட்டங்கில் நடைபெறும் சுப்பர் 12 சுற்று ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் ஒன்றையொன்று வீழ்த்தி வெற்றிபெற முயற்சிக்கவுள்ளன.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் 2 தடவைகள் சந்தித்தித்திருந்தன. அவற்றில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை ஈட்டியுள்ளன.

துபாய் விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் பெற்ற 85 ஓட்டங்களின் உதவியுடன் நியூஸிலாந்து 4 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது.

ஆனால், மிச்செல் மார்ஷ் பெற்ற ஆட்டமிழக்காத 77 ஓட்டங்கள், டேவிட் வோர்னர் பெற்ற 53 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கையை 2 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களாக உயர்த்த அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றிபெற்று உலக சம்பியனானது.

அந்த இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர்கள் இந்த வருடமும் இரண்டு அணிகளிலும் இடம்பெறுவதால் இன்றைய போட்டி பரபரப்வை ஏற்படுத்துவதாக அமையும்.

இந்த இரண்டு அணிகளும் இருபது 20 கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 15 சந்தர்ப்பங்களில் அவுஸ்திரேலியா 10 – 5 என முன்னிலையில் இருக்கிறது.

அதேவேளை, 2011க்குப் பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் நியூஸிலாந்து வெற்றிபெற்றதில்லை. எவ்வாறாயினும் அதில் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிபெற நியூஸிலாந்து முயற்சிக்கவுள்ளது.

நியூஸிலாந்தின் அண்மைக்கால இருபது 20 கிரிக்கெட் பெறுபேறுகள் (12-3) சிறப்பாக இருப்பதால் அவுஸ்திரேலியா பெரும் சவாலை எதிர்கொள்ளும் என கருதலாம்.

இரண்டு அணிகளிலும் அதிரடிகளுக்கு பெயர்பெற்றவர்களும் மிகத் துல்லியமாக பந்துவீசுக்கூடியவர்களும் இடம்பெறுவதால் இன்றைய போட்டி கடைசிவரை மிகவும் விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.