அரசியல் கைதிகளின் விடுதலைஅறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாதுவிடுதலைக்காக பாடுபட வேண்டும் எனமுருகையா கோமகன் வேண்டுகோள்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வரவேற்கின்ற அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது விடுதலைக்காக பாடுபட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் வேண்டுகோள்விடுத்தார். யாழ் ஊடக அமையத்தில்நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த வேண்டுகோளை விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு அரசியல் கைதிகள் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஏனைய நான்கு பேரில் இருவர் மேன்முறையீட்டு வழக்கு இருப்பதால் அந்த வழக்கினை மீளப்பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல ஏனைய இருவருக்கும் ஒரு வருடம் புனர்வாழ்வளிக்க வேண்டி தீர்ப்பு இருப்பதன் காரணமாக சிறைச்சாலை நிர்வாகம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் எதிர்வரும் வாரங்களில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மன்னிப்பு அளிப்பதை அரசியல் கைதிகளுடைய விடுதலைக்கான தொடக்கமாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு பார்ப்பதுடன் அதனை வரவேற்கின்றது. அதே நேரத்தில் நீண்ட காலமாக இருக்கின்ற ஆயுள் தண்டனை கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். இதனை ஒரு தொடக்கமாக கருதி மீதமுள்ள ஏனைய கைதிகளையும் விடுவிப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் நாட்டினுடைய பொருளாதாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற உள்ளதாக அறிகின்றோம். அதில் உள்ள புலம்பெயர்ந்த உறவுகள், புலம்பெயர் அமைப்புகள் மீதமுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நலன் அடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த வேண்டுமென நாங்கள் கோருகின்றோம். விடுதலை வரவேற்கின்ற அரசியல் கட்சிகள், அரசியல் பிரதிநிதிகள் பொது அமைப்புகள் அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது விடுதலைக்காக பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்- என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.