அவுஸ்திரேலியாவை குறிவைக்கிறது இலங்கை ! வெல்லப்போவது யார் ?
அயர்லாந்துக்கு எதிரான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றில் வெற்றியீட்டியதன் மூலம் பெரும் உற்சாகம் அடைந்துள்ள இலங்கை, இரண்டாவது வெற்றிக்கு குறிவைத்து அவுஸ்திரேலியாவை இன்று எதிர்த்தாடவுள்ளது.
இதே குழு இதே குழுவில் ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்திடம் படுதோல்வி அடைந்ததால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதற்கும் மிக மோசமான எதிர்மறை நிகர ஓட்ட வேகத்தை (-4.45) சீர் செய்வதற்கும் அவுஸ்திரேலியா முயற்சிக்கவுள்ளது.
உலக சம்பயின் அவுஸ்திரேலியாவை வெற்றிகொள்வதற்கு இன்றைய முக்கிய போட்டியில் ஆசிய சம்பியன் இலங்கை விவேகத்துடன் விளையாடுவது அவசியமாகும்.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.
சில வருடங்களுக்கு முன்னர் புனர்நிர்மாணிக்கப்பட்ட 60,000 பார்வைகளுக்கான கொள்ளவைக் கொண்ட பேர்த், ஒப்டஸ் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் கட்டாய வெற்றிக்காக மோதவுள்ளன.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் ப்ரமோத் மதுஷான் ஆகிய இருவரும் உபாதைகளிலிருந்து பூரண குணமடைந்து முழு உடற்தகுதியைப் பெற்றுள்ளதால் இலங்கை அணியில் இன்று விளையாடுவார்கள் என அறியக்கிடைக்கிறது.
அயர்லாந்துடனான போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவுக்குப் பதிலாக அஷேன் பண்டார சேர்த்துக்கொள்ளப்பட்ட போதிலும் ஆரம்ப வீரராக விளையாடிய தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களைப் பெற்று தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி இருந்தார். அஷேன் பண்டாரவுக்கு துடுப்பெடுத்தாட அவசியம் ஏற்படவில்லை.
பெத்தும் நிஸ்ஸன்க விளையாடினால் அஷேன் பண்டாரவுக்கு சந்தர்ப்பம் கிடைக்காது. அதேபோன்று ப்ரமோத் மதுஷன்கவுக்கு வாய்ப்பு கிடைத்தால் பெரும்பாலும் லஹிரு குமார விளையாடாமல் இருப்பார்.
இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணப் போட்டிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள விதமானது அணிகளுக்கு பெரும் சிரமத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. அவுஸ்திரேலியா ஒரு மிகப் பெரிய கண்டமாக இருப்பதால் போட்டிகள் நடைபெறும் ஒரு நகரிலிருந்து மற்றைய நகருக்கு மணித்தியாலக் கணக்கில் விமானத்தில் பயணிக்க வேண்டியுள்ளது.
இலங்கை அணியினர், அயர்லாந்துடனான போட்டி முடிந்தவுடன் அன்றைய தினமே பெர்த் நகரிலிருந்து ஹோபார்ட் நகருக்கு பிரத்தியேக விமானம் மூலம் பயணிக்க நேரிட்டது.
நீண்ட தூர மற்றம் நீண்ட நேர (4 மணித்தியாலங்களுக்கு மேல்) பயண களைப்புக்கு மத்தியிலும் இன்றைய போட்டியில் மனஉறுதியுடன் விளையாடி அவுஸ்திரேலியாயாவை வெற்றிகொள்ள முடியும் என பேர்த் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்த சுழல்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன கூறினார்.
அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பப் போட்டியில் சிதறடிக்கப்பட்டதால் உங்களுடனான போட்டியில் வீராவேசத்துடன் பந்துவீசுவாரகள். அதை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தீக்ஷன,
‘அவுஸ்திரேலிய அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களும் சுழல்பந்துவீச்சாளர்களும் இருக்கின்றனர். நடப்பு உலக சம்பியன் என்ற வகையில் அவர்கள் எதிர்நீச்சல் போட்டு சரியான இலக்கை நோக்கி பந்துவீசுவார்கள் என நான் நினைக்கிறேன். மேலும் பேர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையக்கூடும். ஆனால், திறமையான துடுப்பாட்ட வரிசை எமது அணியில் இருக்கிறது. நாங்கள் 160, 170க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெறுவோம் என நான் நினைக்கிறேன்’ என பதிலளித்தார்.
அவுஸ்திரேலியாவின் அரை இறுதிக் கனவைக் கலைத்து அந்த சுற்றில் உங்களது அணி நுழைந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என கேட்கப்பட்டதற்கு,
‘அவுஸ்திரேலியா வெளியேறுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். அதேவேளை, வெற்றிபெறுவது நலமானது. எப்போதும் எங்கள் நோக்கம் எல்லாம் கடைசி 4 அணிகளில் இடம்பெறுவதாகும். அந்தத் தகுதியைப் பெறவதற்கு அவுஸ்திரேலியாவை நாங்கள் வெற்றிகொள்ளவேண்டும். எனவே என்ன வகையான ஆடுகளமாக இருந்தாலும் நாங்கள் சரியான இலக்கை நோக்கி பந்துவீசுவது அவசியமாகும்’ என தீக்ஷன குறிப்பிட்டார்.
அதிவேகப்பந்துவீச்சுக்கு பேர்த் ஆடுகளம் சாதகமான போதிலும் சுழல்பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்கவும் மஹீஷ் தீக்ஷனவும் சிறப்பாக பந்துவீசி அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடியைக் கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மிச்செல் மார்ஷிடம் நேற்றைய ஊடக சந்திப்பில் வினவப்பட்டபோது,
‘பேர்த் ஆடுகளத்தில் பந்து அதிகம் சுழலாது. அது எமக்கு சாதகமாகும். பொதுவாக எமது அணி சுழல்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும். குறிப்பாக அவுஸ்திரேலிய சூழல்களில் நாங்கள் சுழல்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வோம். அந்த சவாலை எதிர்கொள்ள காத்திருக்கிறேன். எனினும், அவர்கள் இருவரும் (ஹசரங்க, தீக்ஷ்ன) உலகத் தரம்வாய்ந்த சுழல்பந்துவீச்சாளர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அத்துடன் இலங்கை அணி இலேசுபட்ட அணியல்ல. எனவே நாங்கள் சரியான வியூகங்களுடன் விளையாடி வெற்றிபெறுவதை உறுதிசெய்யவேண்டும்’ என்றார்.
பாரம்பரியமாக வேகமும் பந்து எகிறிப்பாயும் தன்மையும் கொண்ட பேர் ஆடுகளத்தில் இலங்கையை வேகபந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்களா என அவரிடம் கெட்கப்பட்டதற்கு,
‘ஆம். அப்படித்தான் நான் நம்புகிறேன். ஆக்ரோஷ குணத்துடன் அவர்கள் பந்துவீசினால் அதனைப் பார்க்கலாம். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் துல்லியமாக பந்துவீசினால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக நியூஸிலாந்துடான போட்டிக்கு பின்னர் அவர்களிடம் இருந்து மிகப் பெரிய பொறுப்பை எதிர்பார்க்கலாம்’ என மிச்செல் மார்ஷ் பதிலளித்தார்.
எனவே, வேகமும் பந்து எகிறிப்பாயும் தன்மையும் கொண்ட ஆடுகளத்தில் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்களை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் விவேகத்துடனும் நுட்பத்திறனுடனும் எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தால் இலங்கை மற்றொரு வெற்றி, மிகவும் அவசியமான கிடைப்பது நிச்சயம்.
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இரண்டு அணிகளும் 4 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் 3 – 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இருபது 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் அதிகூடிய மொத்த எண்ணிக்கை 168 ஓட்டங்களாகும். இலங்கையின் அதிகூடிய மொத்த எண்ணிக்கை 160 ஓட்டங்களாகும்.
குறைந்த எண்ணிக்கை: அவுஸ்திரேலியா 87, இலங்கை 102.
அணிகள்
இலங்கை :பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, ப்ரமோத் மதுஷான் அல்லது லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ.
அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), மிச்செல் மார்ஷ், க்லென் மெக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மெத்யூ வேட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.
கருத்துக்களேதுமில்லை