பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பம்-இந்தியா மற்றும் ஆபிரிக்க பின்னணி
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து பேன்னி மோர்டாண்ட் விலகியதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்க இருக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் பெற்றோர் மற்றும் அவரது பின்னணி தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் பிறந்த ரிஷி சுனக்
பிரித்தானியாவின் 57 வது பிரதமராக பதவியேற்க உள்ள இந்திய வசம்சாவளியான ரிஷி சுனக், கடந்த 1980 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரத்தில் பிறந்துள்ளார்.
இவரது பெற்றோர் யாஷ்விர் மற்றும் உஷா சுனக் ஆகியோர் இந்திய – ஆப்பிரிக்க பின்னணியை கொண்டவர்கள். கென்யா நாட்டில் பிறந்த இவரது தந்தை யாஷ்விரின் பூர்வீகம் ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் அன்றைய பஞ்சாப் மாநிலமாகும்.
ரிஷி சுனக்கின் தந்தை வழி முன்னோர்கள் தற்போது பாகிஸ்தானின் ஆளுகைக்குள் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரான்வாலா என்ற இடத்தில் பிறந்தவர்கள். 1960 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரிஷி சுனக்கின் பாட்டனாரும் பாட்டியும் கென்யா நாட்டுக்கு குடிபெயர்ந்தனர்.
பிரித்தானியாவில் குடியேறிய தந்தை
அன்று அவர்கள் குடியேறிய பகுதி தற்போது டான்சானியா எல்லைக்குள் அமைந்துள்ளது. கென்யாவில் இருந்து பிரித்தானியா சென்ற சுனக்கின் தந்தை யாஷ்விர் சுனக் தேசிய சுகாதார மத்திய நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது தாய் உஷா சுனக் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
42 வயதான ரிஷி சுனக் இந்து மதத்தை சேர்ந்த என்ற போதிலும் அசைவ உணவு பிரியர்.
தனது பெற்றோர் ஏழை, எளிய மக்களுக்கு அர்ப்பணிப்போடு உதவி செய்வதை பார்த்தே தான் வளர்ந்ததாக ரிஷி சுனக் தனது இணையதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற வின்செஸ்டர் கல்லூரி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அரசியல், பொருளாதாரம், தத்துவ முகாமைத்துவ கல்வியை அவர் பயின்றார்.
இன்போசிஸ் நாராணயமூர்த்தியின் மகளுடன் திருமணம்
2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் ஆய்வாளராக பணியாற்றிய அவர், இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி நடத்தி வந்த கடாமரான் வென்சர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை, ரிஷி சுனக் திருமணம் செய்துள்ளார்
“சர்வதேச அளவில் படிக்க, பணியாற்ற வாழவும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். நான் என் மனைவி அக்ஷதாவை கலிஃபோர்னியாவில் சந்தித்தேன். எங்களுக்கு கிருஷ்ணா, அனோஸ்கா என 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் என்னை மகிழ்ச்சியோடும், பரபரப்போடும் வைத்துள்ளார்கள்.” என தனது குடும்பம் பற்றி சுனக் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக் தனது ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, கிரிக்கெட், கால்பந்து விளையாடுவது, சினிமா பார்ப்பது போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார்.
அரசியல் பிரவேசம்
அரசியலுக்குள் பிரவேசித்த பின்னர், 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக ரிச்மாண்ட் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார்.2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் ரிஷி சுனக் இதே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் உள்ளராட்சித்துறை அமைச்சராக பதவியேற்ற அவர், 2019 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் திறைசேரியின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியாவின் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அவர் இந்த ஆண்டு ஜூலை வரை அந்த பதவியை வகித்து வந்தார்.
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்று வீழ்ச்சியடைந்துள்ள பிரித்தானியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பார் என அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர்.
இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்த பிரித்தானியாவை ஆட்சி செய்யும் பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பதவியேற்கவிருப்பது இந்திய மக்களை மகிழ்ச்சியடைந்த செய்துள்ளது.
இதன் மூலம் பிரித்தானியாவின் பிரதமாரகும் முதல் இந்திய வம்சாவளி மற்றும் முதல் பிரிட்டன் – ஆசியர் என்ற பெருமையையும் ரிஷி சுனக் பெற்றுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை