குருந்தூர் மலை, வெடுக்குநாரி பிரச்சினைகளை தீர்க்க முயலும் அரசாங்கம்!
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி விவகாரங்களை சுமுகமாக தீர்த்து வைக்கும் முயற்சியாக அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ச ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது வாரத்தில் குறித்த பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளனர்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
அவற்றுள் தமிழ் மக்களின் வரலாற்று தொன்மைமிகு குருந்தூர்மலை, வெடுக்குநாரி ஆலயம் தொடர்பான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குறித்த இரண்டு அமைச்சர்களும் கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
ஏற்கனவே, திருகோணேஸ்வர ஆலயத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் நேரடியாக சென்று, ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினை சம்பந்தப்பட்ட தரப்புக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. –
கருத்துக்களேதுமில்லை