“இந்தியா கூட தோத்ததுல இருந்து வெளிய வர்றதுக்குள்ள அடுத்ததா?”.. கடைசி பந்தில் கெத்து காட்டிய ஜிம்பாப்வே.. பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி!!

பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், கடைசி பந்தில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

pakistan lost their second game in super 12 against zimbabwe

8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றில் இருந்து இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கும் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதில் குரூப் 2 வில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளது. இதில், பாபர் அசாம் தலைமையிலான இந்திய அணி, தங்களின் முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தங்களின் இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை இன்று (27.10.2022) பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது வாசீம் 4 விக்கெட்டுகளும், சதப் கான் 3 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மசூத் மட்டும் 44 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இதனால், எந்த அணி வெற்றி பெறும் என்ற விறுவிறுப்பு கடைசி வரை நிலவி இருந்தது. இறுதி ஓவரில், பாகிஸ்தான் அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.

முதல் 3 பந்துகளில் 8 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி 3 பந்துகளில் 3 ரன்கள் பாகிஸ்தான் அணிக்கு தேவைப்பட்டது. ஆனால், 4 வது பந்தில் ரன் கொடுக்காத பிராட் இவான்ஸ், 5 வது பந்தில் நவாஸை அவுட் ஆக்கி இருந்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட ஷாஹீன் அப்ரிடி இரண்டாவது ரன் ஓடும் போது ரன் அவுட் செய்யப்பட்டிருந்தார். இதனால், ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது.

முன்னதாக, இந்திய அணியுடனும் ஜெயிக்கும் வாய்ப்பு இருந்த போது அதனை கடைசி பந்து வரை சென்று கோட்டை விட்ட பாகிஸ்தான் அணி, தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் கடைசி வரை சென்று தோல்வி  அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.