பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த இ.போ.ச பேருந்து..! தட்டிக்கேட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!!
பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று தொடர்ச்சியாக பாடசாலை முடிவுறும் நேரத்திற்கு முன்னதாக மாங்குளம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக வருகைதந்து சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஆசிரியர்களை ஏற்றி செல்வதாகவும் மாணவர்களை ஏற்றாது செல்வதாகவும் மாணவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (02.11.2022) மாலை 1.53 மணிக்கு மாங்குளம் மகாவித்தியாலயம் முன்பாக வந்த பதுளை யாழ்ப்பாணம் வழித்தடத்தில் பயணிக்கும் பதுளை சாலைக்கு சொந்தமான WP ND 9935 இலக்க பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் 2.08 வரை பேருந்தை பாடசாலைக்கு முன்பாக நிறுத்தி வைத்து ஆசிரியர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு மாணவர்களை ஏற்றாது செல்ல முற்பட்ட போது மாணவர்களின் முறைப்பாட்டுக்கமைய மாணவர்களை ஏற்றுமாறு ஊடகவியலாளர் கோரிய போது நேரம் செல்வதாகவும் தாங்கள் செல்ல வேண்டும் எனவும் மாணவர்களை ஏற்றாது செல்ல முற்ப்பட்டனர்.
இந்நிலையில் பேருந்தை மறித்து மாணவர்களை ஏற்றுமாறு ஊடகவியலாளர் கோரிய போது ஊடகவியலாளர் தமது கடமைக்கு இடையூறு விளைவித்தாக காவல்துறையில் முறையிடுவோம் எனவும் தெரிவித்து ஊடகவியலாளரை பேருந்து சாரதி தனது தொலைபேசியில் காணொளி பதிவு செய்து அச்சுறுத்தியதோடு ஊடகவியலாளர் பயணித்த துவிச்சக்கரவண்டியையும் புகைப்படம் எடுத்து ஊடகவியலாளரை தாக்குபவர்கள் போல் அச்சுறுத்தியுள்ளார்.
இதன் போது பேருந்தில் பயணியாக வந்த இராணுவ வீரர் ஒருவரும் பேருந்தில் இருந்து இறங்கி வந்து தான் முகாமுக்கு செல்ல வேண்டும் உண்டே பேருந்தை செல்ல விடுங்கள் எனவும் காவல்துறையை அழைத்து ஊடகவியலாளரை காவல்துறையில் கொடுக்குமாறும் தெரிவித்து தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததோடு குறிப்பிட்ட சில மாணவர்களை மட்டும் ஏற்றிக் கொண்டு மீதி மாணவர்களை ஏற்றாது பேருந்தை கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில் இவ்வாறான பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும் மாணவர்களும் கேட்டுநிற்கின்றனர்.
பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து ஆசிரியர்களை ஏற்றி செல்லும் இவர்களுக்கு ஏன் மாணவர்களை ஏற்ற முடியவில்லை.
நீதிமன்றம் வரை குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டும் இவ்வாறன பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் மீது இலங்கை போக்குவரத்து சபை சட்டநடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ9 வீதியில் பயணிக்கும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது .
இந்த நிலை ஏ9 வீதியில் உள்ள பல பாடசாலைகளுக்கு பல இடங்களில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு குறித்த நிலை ஏற்படுகிறது.
இதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குப்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்திற்கு பனிக்கன்குளம் மற்றும் கிழவன் குளம் ஆகிய கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றனர்.
மாணவர்களை பருவகால சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க மாணவர்களும் பருவகால சீட்டு பெற்றுக் கொண்டுள்ளனர், இதனால் மாணவர்கள் தற்போது தனியார் பேருந்துகளில் பயணம் செய்யமுடியாத காரணத்தால் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் மாத்திரமே பயணம் செய்ய முடிகிறது.
இவ்வாறான பின்னணியில் கணிசமான பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் மாணவர்களுக்கு உரிய பேருந்து சேவையை வழங்குகின்ற போதும் சில பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் மாணவர்களை பேருந்தில் ஏறவேண்டாம் என தெரிவிக்கின்றனர்.
பேருந்து தரிப்பிடங்களில் நிறுத்தி பயணிகளை ஆசிரியர்களை ஏற்றி செல்லும் போதும் மாணவர்களை பேருந்தில் ஏற வேண்டாம் என தடுக்கின்றனர் அதனை மீறி மாணவர்கள் ஏறினால் அவர்களை ஏசுவதும் உரிய இடங்களில் இறக்காமல் செல்லும் நிலையும் தொடர்கிறது.
கருத்துக்களேதுமில்லை