அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முயற்சியில் நியூஸிலாந்து
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றில் நியூஸிலாந்து தனது கடைசியும் தீர்மானம் மிக்கதுமான போட்டியில் அயர்லாந்தை இன்று சந்திக்கவுள்ளது.
அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப் போட்டியில் தற்போது 5 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கும் நியூஸிலாந்து மிகப் பெரிய வெற்றியை ஈட்டி அரை இறதி வாய்ப்பை உறுதி செய்ய முயற்சிக்கும் என்பது உறுதி.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லர்நது களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
இந்த வருட உலகக் கிண்ணத்தில் குழு 1 சுப்பர் 12 சுற்று ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியனை 89 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து, இலங்கையை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டது. இதனிடையே ஆப்கானிஸ்தானுடான போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததால் நியூஸிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு இன்றைய போட்டி முடிவுவரை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. அப் போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் குழு 1 அணிகள் நிலையில் +2.233 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் நியூஸிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
நியூஸிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தலா 5 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் அவற்றின் நிலைகள் நிகர ஓட்ட வேக அடிப்படையில் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
இன்றைய போட்டியில் நியூஸிலாந்து தோல்வி அடைந்தால் அல்லது ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டால் அவ்வணி அரை இறுதிக்கு செல்லுமா இல்லையா என்பதை அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முடிவும் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி முடிவும் தீர்மானிக்கும்.
நியூஸிலாந்தைப் பொறுத்த மட்டில் அயர்லாந்துடனான இன்றைய போட்டி இலகுவாக அமையப்போவதில்லை.
இரண்டு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை முதல் சுற்றிலும் ஒரு தடவை உலக சம்பியனான இங்கிலாந்தைசுப்பர் 12 சுற்றிலும் வெற்றிகொண்ட அயர்லாந்து, மற்றொரு அசாத்திய திறமை மூலம் நியூஸிலாந்தை வீழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் மீதமிருக்க நியூஸிலாந்தின் வெற்றிக்கு 27 பந்துகளில் 54 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், 20 ஓட்டங்களால் நியூஸிலாந்து தோல்வி அடைந்தது.
எனவே இன்றைய போட்டியில் எதுவும் நிகழக்கூடும் என்பதால் கடைசிவரை அப் போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றிபெற்று ஆப்கானிஸ்தானிடம் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தால் அயர்லாந்து அரை இறுதியில் நுழைந்துவிடும். ஆனால், நியூஸிலாந்தை 105 ஓட்டங்களால் அயர்லாந்து வெற்றிகொள்ளும் என்பது சாத்தியப்படக்கூடியதல்ல.
ஒருவேளை நியூஸிலாந்து தோல்வி அடைந்து அவுஸ்திரேலியா வெற்றிபெற்றால், இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி அவுஸ்திரேலியாவுடன் அரை இறுதியில் நுழையும்.
நியூஸிலாந்து வெற்றிபெற்று அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தால் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி நியூஸிலாந்துடன் அரை இறுதியில் இணையும்.
இன்றைய இரண்டு போட்டிகளில் நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் வெற்றிபெற்றால் நியூஸிலாந்து நிகர ஓட்ட வேக அடிப்படையில் அரை இறுதியில் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இலங்கையிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்தால் அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறும்.
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளும் தத்தமது கடைசிப் போட்டிகளில் வெற்றிபெற்றால் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். ஆனால் இந்த 3 அணிகளும் தோல்வி அடைந்தால் இலங்கையும் அயர்லாந்தும் அரை இறுதி வாய்ப்புகளைப் பெறும்.
எனவே, இன்று நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளும் தீர்மானம் மிக்கவையாக அமையவுள்ளன.
அணிகள்
நியூஸிலாந்து: பின் அலன், டெவன் கொன்வே, கேன் வில்லியம்சன் (தலைவர்), க்லென் பிலிப்ஸ், டெரில் மிச்செல், ஜேம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர், டிம் சௌதீ, இஷ் சோதி, ட்ரென்ட் போல்ட், லொக்கி பெர்குசன்.
அயர்லாந்து: போல் ஸ்டேர்லிங், அண்டி பெல்பேர்னி (தலைவர்), லோர்க்கன் டக்கர், ஹெரி டெக்டர், கேர்ட்டிஸ் கெம்ஃபர், ஜோர்ஜ் டொக்ரெல், கெரத் டிலேனி, மார்க் அடயார் அல்லது க்ரஹாம் ஹியூம், ஃபியோன் ஹாண்ட், பெரி மெக்கார்த்தி அல்லது கொனர் ஒல்ஃபேர்ட், ஜொஷ் லிட்ல்.
கருத்துக்களேதுமில்லை