லொட்டரியில் விழுந்த பணத்தை பெறச் சென்ற பாட்டிக்கு அடித்த அடுத்த அதிஷ்டம்
அமெரிக்காவில் 70 வயது பாட்டி ஒருவருக்கு லொட்டரியில் அடுத்தடுத்து இரண்டு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனால் லொட்டரி நிறுவன அதிகாரிகளே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி எப்போது வரும் என்பதை யார்தான் சொல்ல முடியும்? ஆனால் இப்படியும் ஜாக்பாட் ஒருவருக்கு அடிக்குமா? என கேட்க வைத்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த 70 வயது பெண் ஒருவர்.
1 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசு
அமெரிக்காவின் டெலாவர் மாகாணத்தை சேர்ந்தவர் அந்த 70 வயது பாட்டி. இவர் சமீபத்தில் நெவார்க் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது லொட்டரி டிக்கெட் ஒன்றையும் பாட்டி வாங்கியுள்ளார். அதிஷ்டவசமாக அந்த லொட்டரிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக விழுந்திருக்கிறது. இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர் தனது தோழி ஒருவருடன் கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி பரிசு பணத்தை வாங்க சென்றிருக்கிறார். கையில் பணத்தை வாங்கியவுடன் குஷியான பாட்டி, அந்த தருணத்தை கொண்டாட நினைத்திருக்கிறார்.
இதனால் வீட்டுக்கு திரும்பும் வழியில் ஷொப்பிங் செண்டருக்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கு மேலும் 3 லொட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார் பாட்டி. அங்குதான் அடுத்த இன்ப அதிர்ச்சி அவருக்கு நிகழ்ந்திருக்கிறது. அவர் வாங்கிய 3 லொட்டரி டிக்கெட்டுகளில் ஒன்றில் 3 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக கிடைத்திருக்கிறது.
மற்றுமொரு அதிஷ்டம்
ஆரம்பத்தில் அவராலேயே இதனை நம்ப முடியவில்லை. ஆனால், அவர் வெற்றி பெற்றதை லொட்டரி நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இதுபற்றி பேசியுள்ள அவர்,”1 இலட்சம் டொலர் வென்றதை நான் முதலில் எனது தோழியிடம் சொன்னேன். அவருடன் பரிசை வாங்க போனேன். திரும்பிவரும்போது மேலும் 3 டிக்கெட்டை வாங்கினேன். அதில் ஒன்றில் 3 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசாக கிடைத்திருப்பதை அறிந்து நான் திகைத்துப்போனேன். என்னால் அதனை நம்பவே முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
மேலும், அடுத்தடுத்து இரண்டு ஜாக்பாட்டை வென்ற பாட்டிக்கு லொட்டரி நிறுவன அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
தன்னுடைய பெயரை வெளிப்படுத்தவேண்டாம் என அந்த பாட்டி லொட்டரி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக லொட்டரி வாங்கிவந்திருக்கும் இந்த பாட்டி தனது பரிசு தொகைகளை சேமிக்க இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு ஜாக்பாட்களை 70 வயது பாட்டி வென்றது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
கருத்துக்களேதுமில்லை