150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை..! வெளியாகிய பகீர் தகவல்

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாக காணொளி ஊடாக கோரிக்கை விடுக்கப்படுள்ளது.

ஓமானிலிருந்து 150 இற்கும் மேற்பட்ட பெண்கள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள காணொளியில்,

ஓமான் நாட்டில் நிர்க்கதியாகிய நிலையில் இலங்கைக்கு திரும்ப முடியாமல் தினமும் கண்ணீருடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இலங்கைப் பெண்கள் 150 பேரின் துயரக் கதையை இதனூடாக இலங்கை அதிபருக்கும், பிரதமருக்கும், அரசாங்கத்துக்கும் மற்றும் தூதரகங்களுக்கும் அறிவிக்கிறோம்.

இலங்கையிலுள்ள ஏஜென்ஸியும் இங்கே ஓமான் நாட்டிலுள்ள ஏஜென்ஸியும் எங்களை ஏமாற்றி, சுற்றுலா விசாவில் அழைத்து வந்து எங்களை இங்கே ஓமானில் விற்றுவிட்டார்கள்.

இதனால் நாங்கள் இப்போது அடிமைகளாக இங்கே அகப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த ஏஜென்ஸிகள் எங்கள் ஒவ்வொருவரிடமும் தலா 18 இலட்சம் ரூபாவை வாங்கிக்கொண்டே எங்களை அடிமைகளாக விற்றிருக்கிறார்கள்.

கையில் கடவுச் சீட்டும் இல்லை. அதனையும் பறித்துக் கொண்டார்கள். அதனால் நாங்கள் எங்களது நாட்டுக்குத் திரும்ப முடியாதுள்ளது.

தொடர்பாடல் எதுவுமே இல்லாமல் தொடர்பு கொள்ளக் கூடிய கைபேசிகள் எதுவுமே நாம் பாவிக்க முடியாது மறுக்கப்பட்டுள்ளோம்.

 

எங்களது துயரங்களை ஏறெடுத்துப் பாருங்கள், எமது தாய் தந்தையர், சகோதரர்கள், பிள்ளைகள் அவர்களது நிலைமை, அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கூட எமக்குத் தெரியாது.

சம்பளம் இல்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை. சவர்க்காரம் வாங்கக் கூட கையில் காசு இல்லை. நாங்கள் பரம ஏழைகள் என்றபடியால்தான் இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக வந்தோம்.

நாங்கள் அனைவரும் பெண்கள். இங்கே சுகாதார வசதிகளும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம்.

மாற்றிக் கொள்ள ஆடைகள் கூட இல்லாது அவஸ்தைப்படுகின்றோம். நோயுள்ள பெண்கள் இங்கே கடும் துயரத்தோடு காலத்தைக் கழிக்கிறார்கள். சிலர் எழுந்திருக்க முடியாத நிலையில் உடல் உபாதைகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

நாங்கள் இங்கே வந்தது எமது வறுமையைப் போக்கவும் பொருளாதார நெருக்கடியிலுள்ள இலங்கை நாட்டுக்கு டொலர் வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குமாகும்.

ஆனால், பெரும் தியாகத்தின் மத்தியில் எங்களது தாயை, தந்தையை, கணவனை, பிள்ளைகளை, உறவுகளைப் பிரிந்து வந்து குடும்பத்துக்கும் நாட்டுக்கும் உதவிசெய்ய வந்த எங்களை இங்கே அடிமைகளாக விற்று எங்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக நாங்கள் கடந்த 26ஆம் திகதி ஆர்ப்பாட்டமும் செய்தோம் அதற்கும் எந்தத் தீர்வும் இல்லை.

இங்குள்ள இலங்கைத் தூதரகமோ, இந்ந நாட்டு அரசாங்கமோ, எவருமே கண்டு கொள்ளவில்லை.

நவம்பர் 1ஆம் திகதி தொழில் நீதிமன்றத்திற்கும் சென்றோம். ஆனால், அங்கும் எமக்கு சார்பாக நீதி வழங்கப்படவில்லை.

நீதிமன்றம் எங்கள் சார்பாக பெற்றுக்கொண்ட 18 இலட்சம் ரூபா பணத்தையும் கட்டிவிட்டு போகுமாறு கேட்கிறார்கள்.

உண்மையில் இலங்கையிலுள்ள பணிப்பெண்களை இங்கே அழைத்து வரும்பொழுது எங்களுக்கு ஒரு இலட்சம் அல்லது இரண்டு இலட்சத்தை மாத்திரம் தந்து விட்டு மிகுதிப் பணத்தை இரு நாட்டிலுமுள்ள ஏஜென்ஸிகள் சுருட்டிக் கொள்கிறார்கள்.

இது ஒரு மோசடியும், மனிதக் கடத்தலும் அடிமை வியாபாரமுமாகும். எனவே மனித உரிமை அமைப்புக்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள் இந்த மோசடியை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.