வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் – ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாயில் வெளியீடு
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாயில் வெளியிடப்பட்டது.
கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் 2003ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றதாகும்.
ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் சாகித்ய அகாடமி இதை மொழிபெயர்த்து வருகிறது.
துபாயில் ‘ரைஸ்’ அமைப்பின் சர்வதேச மாநாட்டில்…
இந்தி – உருது – மலையாளம் – கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது.
‘தி சாகா ஆஃப் தி சாக்டஸ் லேண்ட்’ என்ற பெயர்கொண்ட அந்த நாவல், துபாயில் ‘ரைஸ்’ அமைப்பின் சர்வதேச மாநாட்டில் (புதன்கிழமை) வெளியிடப்பட்டது.
அட்லாண்டிஸ் விடுதியில் நடைபெற்ற விழாவில் கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டார்கள்.
மாநாட்டில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் நூலின் பிரதி வழங்கப்பட்டது. நூலை வெளியிட்டு கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
“காக்கை பறக்காத எங்கள் கள்ளிக்காட்டு வாழ்க்கை சர்வதேச அரங்கில் அரங்கேறுவது குறித்து நான் பெருமைப்படுகிறேன். அரசர்களுக்கும் புராண புருசர்களுக்கும் மட்டுமே இதிகாசம் இதுவரை எழுதப்பட்டிருக்கிறது.
முதன் முதலாய் மண்ணின் மகனுக்கு, உழைக்கும் குடிமகனுக்கு, உண்மையாய் வாழ்ந்தவனுக்கு இந்த இதிகாசம் எழுதப்பட்டிருக்கிறது. இது மண்ணுக்கும் மனிதனுக்குமான தீராத போராட்டமாகும்.
‘எர்னஸ்ட் ஹெமிங்வே’ எழுதிய நோபல் பரிசு பெற்ற நூலுக்கு ‘கிழவனும் கடலும்’ என்று பெயர். நான் எழுதிய இந்த இதிகாசத்தை ‘கிழவனும் நிலமும்’ என்று சொல்லலாம்.
இரண்டுமே மானுடத்தின் வெற்றி பற்றியதாகும். தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை உலக வெளிகளில் உலாவிடுகிறேன்”
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார். மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், நிறுவனத் தலைவர் ஜெகத் கஸ்பர் மற்றும் சர்வதேச நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.
கருத்துக்களேதுமில்லை