ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிரன் பொல்லார்ட் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக இருந்த பொல்லார்ட், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட ஆரம்பித்ததன் மூலம் கிரிக்கெட் உலகில் அதிக கவனம் ஈர்த்திருந்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கால் பதித்த பொல்லார்ட், 13 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி உள்ளார்.
வேறு எந்த அணியிலும் ஆடாமல் இருந்த பொல்லார்ட், மும்பை அணிக்காக எக்கச்சக்க போட்டிகளில் அதிரடியாக ஆடி தங்கள் பக்கம் சாதகமாக போட்டியின் முடிவை மாற்றி அமைப்பதில் அவருக்கு நிகர் யாருமே இல்லை. ஐந்து முறை மும்பை அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ள நிலையில், அதை எட்ட உதவிய பொல்லார்ட்டின் பங்கும் மிகப் பெரியது.
கடந்த சில தினங்களாக, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. அனைத்து அணியினரும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் விரைவில் வெளியிடுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற போவதாக அதிரடி வீரர் பொல்லார்ட் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொல்லார்ட், மும்பை அணியில் ஆட வாய்ப்பு கிடைத்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அதே போல, முகேஷ் அம்பானி, நீட்டா, ஆகாஷ் அம்பானி, அணி நிர்வாகத்தினர், வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை பொல்லார்ட் தெரிவித்துள்ளார். மேலும், மும்பை அணிக்காக ஆட முடியவில்லை என்றால், அதனை எதிர்த்து ஆடும் அணியில் ஆடவும் விரும்பவில்லை என்றும் பொல்லார்ட் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பொல்லார்ட் செயல்பட போவதாக தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொல்லார்ட் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியும் பொல்லார்ட் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது. பொல்லார்ட் முடிவு குறித்து ரசிகர்களும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை