73வயதிலும் நூல்கள் ஊடாக சமூகத்தை நல்வழிப்படுத்தும் மிருசுவில் தமிழ்தாசன் எனும் சிவலிங்கம்.

1978ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 44வருடங்களாக நகைச்சுவை உணர்வு கலந்த சிறந்த பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ள மிருசுவில் தமிழ்தாசன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களுடன் கவிஞர் த.நாகேஸ்வரனின் தென்மராட்சி வீட்டில் ஓர் உரையாடல்.
கேள்வி-உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்-: தென்மராட்சிப் பிரதேசத்தின் மிருசுவில் எனும் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட நான் தற்போது கச்சாய் வீதி சாவகச்சேரி எனும் முகவரியில் வசித்து வருகிறேன்.கணபதிப்பிள்ளை சிவலிங்கம் ஆகிய நான் மிருசுவில் தமிழ்தாசன் எனும் பெயரிலேயே எனது நூல்களை வெளியிட்டு வருகிறேன்.மிருசுவில் தமிழ்தாசன் என்ற நாமமே மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தும் காணப்படுகிறது.
கேள்வி-எத்தனை வருடங்களாக எழுத்து துறையில் ஈடுபட்டு வருகிறீர்கள்?
பதில்-: 1978 ஆம் ஆண்டு தொடக்கம் நான் சிறுகதை மற்றும் நாவல்களை எழுத ஆரம்பித்தேன்.இன்று  73வயதாகியும் நான் நூல்களை பிரசவிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.அந்தவகையில் நான் 44வருடங்களாக எழுத்துதுறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறேன்.
கேள்வி-:நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றி கூறுங்கள்?
பதில்-: நான் இதுவரை 9நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன்.அதில் 7சிறுகதை நூல்கள் மற்றும் 2நாவல்கள் அடங்குகின்றன.
“யதார்த்தம்,காகிதக் கப்பல்கள்,போனது ஓர் பொற்காலம், சிந்தை மகிழ” உள்ளிட்ட ஏழு சிறுகதைகளுடன்-“வாழ நினைத்தால் வாழலாம் மற்றும் பிராயச்சித்தம்” ஆகிய இரண்டு நாவல்களையும் படைத்துள்ளேன்.
கேள்வி-:நூல்களை படைக்க வேண்டும் என்ற சிந்தனை உங்கள் ஆழ் மனதில் தோன்றக் காரணம்-:
பதில்-:சமூகத்தில் எமது கண் முன்பே பல பிரழ்வான சம்பவங்கள் நடக்கின்றன.அவற்றை சீர் செய்து சமூகத்தை நல்வழிப்படுத்த நூல் சிறந்த ஆயுதம் என எண்ணினேன்.அதனாலேயே சமூகத்தை நேர்வழிப்படுத்த நகைச்சுவை உணர்வுடன் சிறுகதை மற்றும் நாவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளேன்.
இருப்பினும் நாட்டு சூழ்நிலையால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக கைவசமுள்ள ஆக்கங்களை அச்சு வாகனம் ஏற்ற முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.கைவசம் உள்ள சிறுகதைகளையும் கால வெள்ளத்தால் அழியுண்டு போகாமல் நூல் வடிவில் வெளியிட வேண்டும் என்ன அவா என் ஆழ் மனதில் உள்ளது.
கேள்வி-:உங்கள் படைப்புகளுக்கு உந்து சக்திகளாக இருந்தவர்கள் யாரேனும் உள்ளனரா?
பதில்-: நிச்சயமாக;
எனது ஆக்கங்களை வெளியிட கிருபா லேணர்ஸ் கிருபாகரன்,சுவிஸ் சந்திரன்,சுவிஸ் நவிகரன் ஆகியோர் நிதி ரீதியான பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.
அதேசமயம் வாழ்நாள் பேராசிரியர் சண்முகலிங்கம், எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் ,இணுவையூர் சிதம்பரம்,திருச்செந்தில்நாதர் ,தென்னியூரான், கவிஞர் நாகேஸ்வரன் ஆகியோர் தந்த ஊக்கமும்-உந்துதலும் நான் இன்றுவரை நூல்களை எழுத காரணமாக அமைந்துள்ளன.
*தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் வறுமைப்பட்ட கலைஞர் என்ற பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள மிருசுவில் தமிழ்தாசனுக்கு அண்மையில் பிரதேச செயலகத்தால் “கலைச்சாகரம் ” விருது வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் கடந்த காலத்தில் “கலாபூசணம்” விருதிற்கு தெரிவு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் கொரோனா சூழ்நிலை காரணமாக அந்த விருது இன்றுவரை தமிழ்தாசனுக்கு கிடைக்கப்பெறவில்லை.
73வயதிலும் எழுதத் துடிக்கும் எழுத்தாளனுக்கு உரிய வசதி வாய்ப்புக்கள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல படைப்புக்களை அவர் வெளியிட்டு சமூகத்தை நல்வழிப்படுத்துவார். என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் காணப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.