சட்டவிரோமாக இறக்குமதி செய்யப்பட்ட 153,375 கிலோகிராம் முழு ஆடை பால் !

153,375 கிலோகிராம் முழு ஆடை பால் மாவைக் கொண்ட 6 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி நியூலாந்திலிருந்து புறப்பட்ட இந்த கொள்கலன்கள் அடங்கிய கப்பல், மலேசியா வழியாக, ஒக்டோபர் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதில் சுமார் 153,575 கிலோகிராம் முழு ஆடைப்பால்மா அடங்கியுள்ளது.

கடந்த 4 ஆம்திகதி திறந்த கணக்கு அடிப்படையில் கொடுப்பனவுகளை செலுத்துவதாக ஆவணங்களில் குறிப்பிட்டு, சுங்கத்திலிருந்து குறித்த பால்மா தொகையை விடுவிக்க அதனை இறக்குமதி செய்த நிறுவனம் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அதன்போது, குறித்த பால்மா கொள்கலன்கள், கப்பலில் ஏற்றப்பட்டு 35 நாட்களும், இலங்கைக் கொண்டு வரப்பட்டு 15 நாட்களும் கழிந்திருந்தன. வழக்கமாக, இறக்குமதிசெய்யப்பட்ட பொருட்களை உரிய நிறுவனங்கள் 3 நாட்களுக்குள் சுங்கத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும், எனினும், குறித்த நிறுவனம் 15 நாட்களாகியும் அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கவில்லை.

திறந்த கணக்கு அடிப்படையில் கீழ் பால்மா இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன், வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பரிந்துரைக்கமைய, ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் அனுமதியின்றி பால்மா தொகையை சுங்கத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் இயலுமை காணப்பட்டது.

எனினும், கடந்த ஜூன் 4 ஆம் திகதிய விசேட வர்தமானியின் பிரகாரம், உற்பத்தியொன்றுக்கான மூலப்பொருளாக இறக்குமதியொன்றை மேற்கொள்வதாயின் அதற்கு ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் முன் அனுமதி பெறப்படவேண்டும்.

எனினும், அவை துறைமுகத்தை அடைந்த பின்னரே அனுமதிக்கு விண்ணப்பிப்பட்டுள்ளது. எனவே, அவை ஏற்றுமதி இறக்குமதி ஒழுங்குவிதிகளை மீறும் வகையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் அறிக்கையின் பிரகாரம் அவை சொக்லேட் மற்றும் வேறுசில உற்பத்திக்காக கொண்டுவரப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சுங்கத்தினரின் விசாரணைகளின் பின்னர், குறித்த பால்மா தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பால் மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்படாததால் சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.