திருக்கோணேஷ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கல் செயற்பாட்டை உடன் தடுத்து நிறுத்தக் கோரிக்கை-வை.ஜெகதாஸ்.

சாவகச்சேரி நிருபர்
திருகோணமலை-திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற பௌத்த மயமாக்கல் செயற்பாட்டை உடன் தடுத்து நிறுத்தி அப் பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் சாவகச்சேரி பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணேஸ்வரர் ஆலய சூழலில் பௌத்தமயமாக்கல் சதித்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
தொல்பொருள் திணைக்களம் உல்லாசத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் சைவத் தமிழ் வரலாறுகளை மாற்றியமைக்க முயற்சிக்கின்றது.அத்துடன் இன-மத முரண்பாடுகளையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றது.இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கையின் மிகத் தொண்மை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் சைவத்தமிழ் மக்களின் பூர்வீக நிலம்.இவ்வாறான பூர்வீக நிலத்தில் தொல்லியல் திணைக்களம் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை முன்னெடுப்பது ஒட்டுமொத்த சைவத்தமிழ் மக்களதும் மனங்களையும் புண்படுத்தும் செயற்பாடாகவே அமைகிறது.
உல்லாசத்துறையை விருத்தி செய்ய பல இடங்கள் இருந்தும் புனித ஆலய சூழலை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலில் அத்துமீறி இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்களை உடனடியாக தடுத்து நிறுத்தி ஆலய சூழலை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.